10 நாத்திகம்

கல்வி வளர்ச்சியும், பொருளாதார வளர்ச்சியும் அடைந்த நாடுகளில் நாத்திகவாதிகள் அதிகரித்துக்கொண்டே இருக்கின்றனர். ஐரோப்பாவின் சமூக ஜனநாயக நாடுகளில் நாத்திகவாதிகள் மிக அதிகமாக இருக்கிறார்கள். மனிதனின் வாழ்க்கைத் தரம் உயர உயர நாத்திகம் அதிகரிக்கிறது. நிகெல் பார்பர் என்னும் உளவியல் நிபுணர் தன் ஆய்வுகள் (137 நாடுகளில்) மூலம் விளக்கி உள்ளார். அதிக வளர்ச்சியடைந்த நாடுகளில் கடவுள் நம்பிக்கை குறைகிறது. ஸ்வீடன் நாட்டில் 64 சதவீதம், டென்மார்க் 48 சதவீதம், பிரான்ஸ் 44 சதவீதம், ஜெர்மனி 42 சதவீதம், அமெரிக்கா 40 சதவீதம் ஆகிய விகிதங்களில் கடவுள் நம்பிக்கையற்றவர்கள் உள்ளனர்.

பொருளாதார வளர்ச்சி அடைந்த நாடுகளில் நாத்திகவாதிகள் ஏன் அதிகம் உள்ளனர் என்கிற ஆய்வினை ஜேம்ஸ் பிரேசா ஆராய்ந்துள்ளார். மதத்திற்குப் பதிலாக அறிவியல் ரீதியான கொள்கையைக் கடைபிடித்ததுதான் இதற்குக் காரணம். கல்வி அறிவு பெற்ற நாடுகளில் கடவுள் நம்பிக்கை குறைவாக உள்ளது. நாத்திகத்திற்கும், அறிவியலுக்கும் நெருங்கிய தொடர்பு உள்ளது. கம்யூனிச கொள்கை உடையவர்களும் நாத்திகவாதிகளாகவே உள்ளனர்.

பொருளாதார பாதுகாப்பு நாத்திகத்தை வளரச் செய்கிறது. சிறந்த ஆரோக்கிய பாதுகாப்பு, இளம் வயதிலேயே இறந்து போவோம் என்கிற அச்சத்தை போக்குகிறது. தங்களது வாழ்க்கை, தங்கள் கட்டுப்பாட்டில் உள்ளது என்பதை உணர்வதால் மதத்தின் தேவை குறைகிறது. தொற்றுநோய் அதிகம் உள்ள நாடுகளில் கடவுள் நம்பிக்கை அதிகமாக இருக்கிறது என்பதை நிகெல் பார்பர் கண்டறிந்துள்ளார். வருமானம் சமமாகப் பிரிக்கப்படும் நாடுகளில் அதிகளவில் கடவுள் மறுப்பாளர்கள் உள்ளனர்.

ஆஸ்திரேலியா, ஆஸ்திரியா, கனடா, செக் குடியரசு, பின்லாந்து, சுவிட்சர்லாந்து, அயர்லாந்து, நெதர்லாந்து, நியூசிலாந்து ஆகிய 9 நாடுகளில் இன்னும் சில ஆண்டுகளில் மதங்கள் அடியோடு அழிந்து போகும் என அமெரிக்கப் பல்கலைக் கழகத்தை சேர்ந்த சமூக ஆராய்ச்சியாளர்களின் ஆய்வு முடிவு கூறுகிறது. மதத்தை சார்ந்திருந்து, அதன் போதனைகளை பின்பற்றாமலே நல்ல வாழ்க்கை வாழலாம் என்ற நம்பிக்கை அதிகரித்து வருகிறது. மதத்தின் பெயரால் நடக்கும் நல்ல காரியங்களைக் காட்டிலும் அநீதிகள் அதிகம் என இவர்கள் கூறுகின்றனர். நாத்திகவாதிகளில் பெண்கள் 29 சதவீதம் இருக்கின்றனர். குறிப்பாக ஆராய்ச்சிகளில் ஈடுபடும் பெண்களில் பெரும்பாலனோர் நாத்திகவாதிகளாக உள்ளனர்.

பெண்ணின் நிலை :

ஆரம்ப காலத்தில் பெண்களை மிக உயர்ந்த ஸ்தானத்தில் வைத்துப் போற்றினார்கள். வரலாற்று ரீதியில் பெண்களை தெய்வமாகவும், மிக உயர்ந்த சமூகப்பாத்திரமாகவும் தாய் வழி சமூகத்தில் வழிபட்டனர்.சொத்தும் பெண்வழியில் இருந்தபடியால் பெண்ணுக்கு மதிப்பு இருந்தது. ஆண், பெண் பாகுபாடின்றி முழு சொத்தும் ஒரு குழுவிற்குச் சொந்தமாகக் கருதப்பட்டது.

பெண்களின் தொழிலாக விவசாயம் இருந்தது. ஆண்கள் ஆடு, மாடு மேய்த்தலில் ஈடுபட்டிருந்தனர். பிறகு ஆணின் தொழிலாக விவசாயம் மாறியது. விவசாய உற்பத்தி முறைக்கேற்ப பெண் வழி உரிமை ஆண் வழி உரிமையாக மாறியது என வரலாற்று ஆராய்ச்சியாளர்கள் நிரூபித்துள்ளனர். சொத்து ஆண்களின் உடமை ஆனதால் பெண் இரண்டாம் நிலைக்குத் தள்ளப்பட்டாள்.

பெண் கடவுளுக்கு கன்னிப் பெண்களை நரபலி கொடுத்தனர். பெண் கடவுளர்களை கொடூரமானவளாக சித்தரித்தனர். பெண் தெய்வங்களுக்குப் பதிலாக ஆண் தெய்வங்களை முன்னிலைப்படுத்தினர். ஆண் கடவுளர்களை கருணை உள்ளம் கொண்டவராக சித்தரித்தனர். இதனால் பெண் கடவுள்களும் இரண்டாம் நிலைக்குத் தள்ளப்பட்டனர்.

ஆண் உயர்ந்தவராகவும், பெண் இரண்டாம் நிலையில் பார்க்கும் அமைப்பு முறை வளர்ந்தது. பெண்ணை அடக்கப்பட்டவளாகவும், இந்த அமைப்புக்கு கட்டுப்பட்டவளாகவும் மாற்றினர். இப்படிப்பட்ட ஆணாதிக்க சமூக அமைப்பின்போதே மதங்கள் தோன்றின. மதங்களை ஆண்களே தோற்றுவித்தனர். ஆகவே மதத்திலும் பெண்கள் இரண்டாம் நிலையிலேயே வைக்கப்பட்டனர்.

பெண்கள் ஆண்களின் சொத்தாகவே கருதப்பட்டது. “பெண்ணேநீ குழந்தைப் பருவம்வரை அப்பன் சொன்னதைக் கேள். வளர்ந்து மணமானதும் கணவன் சொன்னதைக் கேள். உனக்குக் குழந்தை பிறந்து தலையெடுத்ததும் உன் மகன் சொல்வதை கேட்க வேண்டும். உனக்கு இதுதான் கதி. நீ சுதந்திரமாக வாழ தகுதியற்றவள். ஆண் சொல்படி கேள்” என மனு (இந்து மதம் எங்கே போகிறது?) கூறுகிறது.

கடவுள் முதலில் படைத்தது ஆணைத்தான். பிறகுதான் பெண்ணை ஆணின் விலா எலும்பிலிருந்து படைத்தார் என கிறிஸ்தவ மதம் கூறுகிறது. ஆகவே பெண் இரண்டாம் நிலைக்கு உரியவளாக கருதப்படுகிறாள். பெண்ணின் உடம்பு தீட்டுப்பட்டது, புனிதமற்றது, பாவத்தின் சின்னம் என்றே அனைத்து மதங்களும் கூறுகின்றன. பெண்களின் தாழ்நிலையை வலியுறுத்தி, ஆண்களின் ஆணைக்குக் கீழ்படிய வேண்டும் என பிரதான மதங்கள் கூறுகின்றன.

பெண் கடவுளராக இருந்தாலும் அதன் பூசாரியாகவும், பாதிரியாராகவும் ஆண்களே இருக்கின்றனர். உலகளவில் மத நம்பிக்கை அதிகம் உடையவர்கள் பெண்களே. பெண்கள் 86 சதவீதமும், ஆண்கள் 79சதவீதமும் மத நம்பிக்கை உடையவர்களாக இருக்கின்றனர். 2013ஆம் ஆண்டின் மக்கள் தொகை 715 கோடி. இதில் ஆண்கள் 50.4 சதவீதமும், பெண்கள் 49.6 சதவீதமும் உள்ளனர்.

மக்கள் தொகையில் சரிபாதி உடைய பெண்களை இரண்டாம் தர குடிமகளாகவே கருதுகின்றனர். மத நம்பிக்கையில் அதிக நாட்டம் கொண்ட பெண்கள் இரண்டாம் நிலையிலேயே உள்ளனர். பெண்கள் போராடியே தங்களது உரிமையைப் பெற்றுள்ளனர். காலத்துக்கு ஏற்ப மதம் தங்களை மாற்றிக் கொள்ளாத காரணத்தால் மத நம்பிக்கையற்றவர்களும், நாத்திகவாதிகளும் அதிகரித்துக்கொண்டே இருக்கின்றனர்.

பெண் விடுதலை என்பது ஆணுக்கு எதிரான கோஷம் அல்ல. பெண்களும் ஆணுக்கு நிகராக சரிசமமான உரிமைகளைப் பெற்று வாழ வேண்டும். இதற்காக பெண்களின் குரல் ஒரே குரலாக ஒலிக்க வேண்டும்.அப்போதுதான் பெண்களும் சரிநிகராக மதிக்கப்படுவார்கள்.

License

Icon for the Creative Commons Attribution-NonCommercial-NoDerivatives 4.0 International License

மதங்களின் பார்வையில் பெண்கள் by creative commons Attribution-NonCommercial-NoDerivatives 4.0 International. is licensed under a Creative Commons Attribution-NonCommercial-NoDerivatives 4.0 International License, except where otherwise noted.

Share This Book

Feedback/Errata

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *