8

உலகளவில் பாலியல் வன்முறைகள் அதிகளவில் நடைபெற்றுக் கொண்டு வருகிறது. யுனெஸ்கோ ஆய்வின்படி 80 சதவீதம் பாலியல் ரீதியான வன்முறை பெண்கள் மற்றும் குழந்தைகள்மீது நடத்தப்படுகிறது.குறிப்பாக போர், மதக் கலவரங்களின்போது பாலியல் வன்முறை நடத்தப்படுகிறது. பாலியல் வன்முறைகளை மத ரீதியாக பிரிக்க முடியாது. ஆனால் பாதிக்கப்படும் பெண்கள் அல்லது குழந்தைகளையே குறைகூறும் வழக்கத்தை மதங்கள் கையாளுகின்றன.

பெண்கள் கவர்ச்சியான ஆடைகள் அணிவதாலேயே பாலியல் வன்முறைகள் நடக்கிறது என்று மதத் தலைவர்கள் கூறுகின்றனர். ஆண்கள் செய்த தவறைச் சுட்டிக்காட்டுவதில்லை. குற்றச்சாட்டை பெண்கள்மீதே வைக்கின்றனர். பாதிக்கப்பட்ட பெண்ணை தவறாக கூறி, கேவலப்படுத்தும் நோக்குடனே செயல்படுகின்றனர்.

பெண்களை ஒரு பொருளாகவே மதத் தலைவர்களும் கருதுகின்றனர். கலாச்சாரம், உடை, தோற்றம் போன்ற காரணங்களைக் கூறி பெண்களை இழிவுபடுத்துகிறார்கள்.

உலகளவில் பெண்கள்மீது நடத்தப்பட்ட பாலியல் வல்லுறவு பட்டியலில் அமெரிக்கா முதலிடத்திலும், தென் ஆப்பிரிக்கா இரண்டாவது இடத்திலும், இந்தியா மூன்றாவது இடத்திலும் உள்ளது என்று ஆய்வுகள் கூறுகிறது. இந்தியாவைப் பொறுத்தளவில் 90% பாலியல் வல்லுறவுகள் உறவினர்கள், நண்பர்கள் மற்றும் அவர்களுக்குத் தெரிந்த நபர்களால் நடக்கிறது என்று தேசிய குற்றவியல் புலனாய்வு மையம் (National Crime Records Bureau) தெரிவிக்கிறது. கடந்த 20 ஆண்டுகளில் உலகம் முழுவதும் சுமார் 30 சதவீதம் பேர் காவல் துறை மற்றும் ராணுவத்தினரால் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாகி உள்ளனர் எனத் தெரிய வருகின்றது.

பாலியல் வல்லுறவு பட்டியல் 2011

நாடுகள் வழக்குகள்

1. அமெரிக்கா (U.S.A) 89,241

2. இந்தியா 21,397

3. இங்கிலாந்து (U.K) 15,084

4. மெக்ஸிகோ 14,078

5. ப்ரான்ஸ் 10,108

6. ஜெர்மனி 7,724

7. பெரு 6,751

8. ஸ்வீடன் 5,960

9. பிலிப்பைன்ஸ் 5,813

10. ரஷ்யக் குடியரசு 4,907

இந்தியா பாலியல் வல்லுறவு – 2011

மாநிலம் வழக்குகள்

1. மத்தியப் பிரதேசம் 3,114

2. மேற்கு வங்கம் 2,307

3. அஸ்ஸாம் 1,708

4. உத்திரப்பிரதேசம் 1,559

5. மஹாராஷ்டிரா 1,555

6. ராஜஸ்தான் 1,547

7. ஆந்திரப் பிரதேசம் 1,362

8. சட்டீஸ்கர் 991

9. ஒடிஸா 988

10. பீஹார் 793

மக்கள் தொகையின் அடிப்படையில் பார்த்தால் இந்தியாவில் அதிக வன்முறைகள் நடைபெறுகின்றன. இது அமெரிக்காவில் நடைபெறும் பாலியல் வன்முறையைவிட அதிகம். இந்தியாவில் ஒவ்வொரு20 நிமிடத்திற்கும் ஒரு பாலியல் வல்லுறவு நடக்கிறது. 2011ஆம் ஆண்டில் 228,650 வழக்குகள் இந்தியாவில் பதியப்பட்டுள்ளது. இதில் 26.6% பேருக்கு மட்டுமே தண்டனை வழங்கப்பட்டுள்ளது. இந்தியாவில் 27நாடாளுமன்ற உறுப்பினர்கள் பாலியல் வல்லுறவுகளில் ஈடுபட்டுள்ளதாக வழக்குகள் கடந்த ஐந்தாண்டுகளில் பதியப்பட்டுள்ளதாக கூறுகின்றது.

2011 ஆம் ஆண்டில் இந்தியாவில் நடந்த பாலியல் வல்லுறவுகளின் பட்டியலில் முதன்மையான மாநிலமாக மத்தியப் பிரதேசம், மேற்கு வங்காளம், அஸ்ஸாம், உத்திரப்பிரதேசம், மஹாராஷ்டிரா, ராஜஸ்தான், ஆந்திர பிரதேசம்,சட்டிஸ்கர், ஒடிஸா, பீஹார் இடம் பெறுகிறது. இதேபோல் பெரு நகரங்கள் பட்டியலில் டெல்லி, மும்பை, கொல்கத்தா, சென்னை, பெங்களுரு இடம் பெறுகிறது.

இந்தியாவைப் பொறுத்தவரை பெண்கள் பாலியல் வல்லுறவால் பாதிக்கப்பட்டால் 11 சதவீதம் மட்டுமே நல்ல வாழ்க்கை முறையை எதிர்கொள்ள முடிகிறது. மீதியுள்ள 89% பெண்கள் வல்லுறவில் ஈடுபட்ட ஆண்களையே திருமணம் செய்து கொள்ளும்படி நிர்பந்தத்திற்கு உள்ளாக்கப்படுகின்றனர். பாலியல் தொல்லைக்கு ஆளாக்கப்பட்ட பெண்களில் பெரும்பாலானோர் வெளியே சொல்வது கிடையாது.

காவல்துறை அதிகாரிகளிடம் நடத்திய பி.பி.சி. 17, ஜுலை 2011 (B.B.C. 17 July 2011) ஆய்வில், பாலியல் வன்முறையால் பாதிக்கப்பட்ட பெண்களில் 10 நபர்களில் ஒரு நபர் மட்டுமே காவல் நிலையத்தை அணுகுகிறார்கள். பல்வேறு நேரங்களில் காவல் நிலையங்களில் பாதிக்கப்பட்ட பெண்ணை கவுன்சிலிங் கொடுத்து வழக்குகளை பதியாமல் அனுப்பிவிடுகிறார்கள். அரசியல் தலைவர்கள் குற்றவியல் எண்ணிக்கையை குறைத்துக் காட்டும்படி கூறுவதால் காவல்துறை அதிகாரிகள் வழக்குகளை பதியாமல் விட்டுவிடுகின்றனர்.

இந்தியாவில் பாலியல் வல்லுறவில் பாதிக்கப்பட்டவர்கள் அவர்களுடைய குடும்பத்திற்கும், தன் சமூகத்திற்கும் அவமானத்தைத் தேடித்தந்து விட்டதாக 50% பெண்கள் கருதுகின்றனர். 45% பெண்கள் இதை அவமானமாக நினைப்பதில்லை. மாறாக பெண்கள்மீது நடத்தப்படும் அடக்குமுறை மற்றும் பாலியல் ரீதியான வன்முறை என்று கருதுகின்றனர்.

மேற்கத்திய உடை அணிவதாலும், குடிப் பழக்கத்தாலும் இவர்கள்மீது வன்முறை நடப்பதாக 35 சதவீதம் பெண்கள் கூறுகின்றனர். 65% பெண்கள் இதை மறுக்கின்றனர். இந்தியாவில் பாலியல் வன்முறைக்கு எதிராக போராட்டங்கள் ஆங்காங்கே நடத்தாலும், இவை பெரியளவு தாக்கத்தை உண்டாக்கித் தருவதில்லை. ஒரு பெண் பாலியல் வல்லுறவில் பாதிக்கப்பட்டால் இந்திய சமூகத்தில் ஒன்றிணைந்துப் போராடும் கொள்கை யாரிடத்திலும் கிடையாது. எனினும் சில இடதுசாரி கொள்கையுடைய அமைப்புகள் போராடினாலும் அது சிறிதளவே தாக்கத்தை உண்டாக்குகிறது.

இந்தியாவில் சாதி ரீதியாகவும், மத ரீதியாகவும், பொருளாதார, சமூக ஏற்றத்தாழ்வுகளால் பிரிந்து கிடக்கின்றனர். ஒரு பெண் பாலியல் வல்லுறவில் பாதிக்கப்பட்டால், பெண்ணை முதலில் அவள் எந்த சாதியைச் சேர்ந்தவள் என்று பார்க்கிறார்கள். அடுத்தது பொருளாதார, சமூக ரீதியாக பலம் வாய்ந்தவளாக இருக்கிறார்களா என்று பார்க்கிறார்கள். மேலும் எந்த அரசியல் கட்சி அல்லது சாதியக் கட்சியுடன் தொடர்பு உள்ளவர் என்று பார்க்கிறார்கள். குறிப்பாக தலித் பெண்களாக இருந்தால் குற்றப்பத்திரிகை அல்லது முதல் தகவல் அறிக்கை கூட காவல் நிலையத்தில் பதிவதில்லை. மாறாக ஊர் பஞ்சாயத்துகள் மூலம் அபராதம் விதித்து, காவல் நிலையம் செல்லாத வகையில் தடுத்து விடுகின்றனர்.

உலகளவில் குற்றம் சுமத்தப்பட்ட பாலியல் வன்முறையாளர்கள்மீது 20% முதல் 50% மட்டுமே தண்டனை வழங்கப்படுகிறது. இந்தியாவைப் பொறுத்தவரை கிரிமினல் வழக்குகளைவிட பாலியல் வழக்குகளே அதிகமாக உள்ளன. மேலும் ஆண்டிற்கு, ஆண்டு பாலியல் வன்முறைக்குட்பட்ட பெண்ணின் எண்ணிக்கை அதிகரித்த வண்ணம் உள்ளன. இதேபோல் வழங்கப்படும் தீர்ப்புகளின் எண்ணிக்கை மிகவும் குறைவாகவே உள்ளது என்று புள்ளி விவரங்கள் காட்டுகின்றன.

இஸ்லாமிய நாடுகளில் குற்றவியல் நடவடிக்கை குறைவாக உள்ளது என்று எண்ணிவிட முடியாது. இஸ்லாமிய நாடுகளான பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், சோமாலியா, சூடான் போன்ற நாடுகளில் கலாச்சாரம், மதம் சார்ந்த செயல்களில் மிகவும் அபாயகாரமாக உள்ளன. இங்கே பாலியல் ரீதியாக பெண்களை வன்முறைக்கு உட்படுத்துவது மிக அதிகமாக உள்ளது.

பெண்கள் பாதுகாப்பற்ற நாடுகளின் பட்டியல்

1. பாகிஸ்தான் 24%

2. ஆப்கானிஸ்தான் 20%

3. சோமாலியா 20%

4. இந்தியா 13%

5. சூடான் 8%

பெண்களுக்குப் பாதுகாப்பற்ற நாடுகளின் பட்டியலில் இந்தியா நான்காவது இடத்தில் உள்ளது. முதல் 5 நாடுகளில் 4 நாடுகள் இஸ்லாமிய நாடுகளாகும். இந்தியாவிலும் 17 கோடி இஸ்லாமியர்கள் வாழ்கின்றனர். இஸ்லாமிய நாடுகளில் பெண்கள்மீது பாலியல் வன்முறை நடந்ததை நிரூபிக்க நேரடிச் சாட்சி தேவைப்படுகிறது. அதுவும் ஆண் சாட்சியாக இருந்திட வேண்டும் என்கிறது.

இஸ்லாமிய நாடுகளில் பெண் பாலியல் வல்லுறவில் பாதிக்கப்பட்டால் குறைந்தது நான்கு ஆண் சாட்சிகள் இருந்தால் மட்டுமே அது வல்லுறவாக கருதப்படும் என்கிறது. அவ்வாறு இல்லையென்றால் அவை வல்லுறவாக கருதப்படாது. எனினும் அங்கு வழங்கப்படும் தண்டனை மிகவும் கொடூரமாகவும், மனித உரிமையை மீறும் செயலாகவே உள்ளது. கொடூரமான தண்டனை இருந்தும் குற்றங்கள் குறைவதில்லை.

இந்தியாவில் இன்றும் பெண்ணுக்கு கல்வி உரிமை, திருமண உரிமை (காதல்), வேலை வாய்ப்பு, விரும்பும் ஆடையை உடுத்துவது மறுக்கப்படுகிறது. மேலும் பெண்களுக்கு 33 சதவீத இட ஒதுக்கீடு செய்வதற்கும் பாராளுமன்றத்திலேயே எதிர்ப்பு உள்ளது. பல மதத் தலைவர்கள் இஸ்லாமியர்கள், பிற்போக்காக இருக்கிறார்கள் என்று கூறிவிட்டு, தன்னுடைய மதத்தில் உள்ள பிற்போக்குத்தனத்தைப் பற்றியும், பெண் அடிமைத்தனத்தைப் பற்றியும் பேசுவதில்லை.

இந்துப் பெண்கள் இந்து கலாச்சார ரீதியாக முன்னேற வேண்டும். மேலை நாட்டு கலாச்சாரத்தில் நாட்டம் கொள்ளக் கூடாது எனக் கூறி இந்து அமைப்புகள் ஒன்று திரண்டு பெண்கள்மீது தாக்குதல் நடத்துகின்றனர். ஸ்ரீராம் சேனை காதலர் தினத்தில் பூங்காவில் காதல் ஜோடிகள், ஆண், பெண் பேசினால் கட்டாயத் திருமணம் செய்து வைப்போம், பெண்கள் கிளப்புக்குப் போனால் தாக்குவோம் என்கின்றனர். நமது கலாச்சார ஆடைகள்தான் உடுத்த வேண்டும் என்று பெண்களுக்கு கட்டளையிடுகின்றனர்.

இந்துப் பெண்கள் தங்களைப் பாதுகாத்துக்கொள்ள புர்காவை அணியுங்கள் என மதுரை ஆதீனம் கூறியுள்ளார். பெண்கள் உடுத்தும் ஆடையால்தான் வன்முறைக்கு உட்படுத்தப்படுகிறார்கள் என்று கூறியுள்ளார். வேலைக்குப் போகும் பெண்களை கேவலமாகக் கருதும் மதவாதிகளும் உள்ளனர். மதவாதிகள் எப்போதும் பெண்களுக்கு எதிராகவே செயல்படுகிறார்கள் என்பதையே இது காட்டுகிறது.

சாதி, மத, இன துவேசம் எதுவானாலும் பெண்ணுடல் பழிதீர்க்கும் களம்.

நவம்பர் 21, 2012 இல் சிவசேனை அமைப்பின் தலைவர் பால்தாக்ரே மரணத்தையொட்டி மும்பையில் நடைபெற்ற முழு அடைப்பு பற்றி கருத்துகளை சமூக வலைதளங்களில் வெளியிட்ட இரண்டு இளம் பெண்கள் கைது செய்யப்பட்டனர். இவர்கள் மக்கள் மத்தியில் விரோதத்தைத் தூண்டியதாகவும், மோசமான கருத்தை வலைதளங்களில் வெளியிட்டதாகவும் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

மகராஷ்டிரா மாநிலத்தில் இந்துத்துவா மற்றும் இன அரசியலை வேரூன்ற செய்த பால்தாக்கரேவின் மரணத்திற்குப் பின்பு நடைபெற்ற முழு அடைப்பு, மரியாதை நிமித்தமாக நடைபெறவில்லை. மாறாக பயத்தால் நடைபெற்றது என்று குறிப்பிட்டு வலைதளத்தில் பதிவு செய்தனர். இதற்காக இவர்கள் கைது செய்யப்பட்டனர். இது கருத்து சுதந்திரத்தைப் பறிக்கும் செயல் என பலர் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

பல்வேறு சம்பவங்கள் கருத்து சுதந்திரத்தையும், பெண்ணுரிமையும் பாதிக்கும் செயலாக விளங்குகிறது. 2013ஆம் ஆண்டு டெல்லி பாலியல் வன்முறையில் பாதிக்கப்பட்ட பெண் இறந்ததால் பல்வேறு போராட்டங்கள் நாடெங்கும் நடைபெற்றது. ஆனால் பாதிக்கப்பட்ட பெண்ணிற்கு நீதி கிடைக்கும் செயலை விட்டு விட்டு பெண்ணைப் பலர் குறை கூறினர். ஏன் இரவு நேரத்தில் அவள் வெளியே செல்ல வேண்டும்? உடைகள் ஏன் இவ்வாறு உடுத்துகிறாள் என்று பெண்ணை கொச்சைப்படுத்தும் செயலில் பல பிற்போக்காளர்கள் கருத்து கூறினர்.

பாலியல் வன்முறையில் ஈடுபடும் ஆணை குறை கூறுவது, அவர்களை கண்டிப்பது கிடையாது. பெண்களை பாலியல் வன்முறைக்கு உட்படுத்தும் முன்பு தற்காப்பிற்காக, நீங்கள் என்னுடைய அண்ணன்,என்னை விட்டுவிடுங்கள் என்று கெஞ்சுங்கள் என்று சில அமைப்புகள் கூறுவது வேதனையளிக்கிறது. சில நாடுகளில் சிறுபான்மை மதங்களில் உள்ள பெண்கள்மீது பாலியல் வன்முறையில் ஈடுபட்டு, கட்டாயத் திருமணம் மற்றும் கட்டாய மத மாற்றத்தை பெண்கள்மீது திணிக்கிறார்கள். 29 நாடுகளில் பெண்கள் மற்றும் பெண் குழந்தைகளின் பாலுறுப்புகளை அறுக்கும் பழக்கத்தை (Female Genetal Mutulation)வைத்துள்ளனர். இதனால் 70 மில்லியன் பெண்கள் மற்றும் குழந்தைகள் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில் 15 முதல் 49 வயதிற்குட்பட்ட பெண்களும், குழந்தைகளும் அடங்குவர். இது ஆப்பிரிக்க நாடுகளில் அதிகளவு நடைபெறுகிறது. இதில் இஸ்லாமிய நாடுகளும் உள்ளடங்குகிறது.

 

License

Icon for the Creative Commons Attribution-NonCommercial-NoDerivatives 4.0 International License

மதங்களின் பார்வையில் பெண்கள் Copyright © 2014 by creative commons Attribution-NonCommercial-NoDerivatives 4.0 International. is licensed under a Creative Commons Attribution-NonCommercial-NoDerivatives 4.0 International License, except where otherwise noted.

Share This Book