3 மதங்களும், பெண்களும்

மதங்கள் பல உள்ளன என வரலாறுகள் கூறுகின்றன. மதம் ஆண்களையும், பெண்களையும் சுரண்டுகின்றன என்று பல ஆய்வாளர்கள் கூறுகின்றனர். இன்றுகூட மதங்கள் அனைத்தும் ஆண்களை அடிப்படையாகக் கொண்டு இயங்கி வருகின்றன. மத அடிப்படையில் பாலினம் இடையே பல்வேறு முரண்பாடான கருத்துக்கள் இருந்து வந்தன. இதனை கிரேக்க கோட்பாடுகள் மற்றும் அதன் ஆய்வுகளின் மூலம் அறியலாம்.

மக்கள் இது போன்ற பாகுபாடுகளை எவ்வாறு உணர்கிறார்கள் என்றால் கடவுள் ஆண்களாக மட்டுமே இருக்க முடியும். பெண்கள் கடவுளாக இருக்க முடியாது என்று நம்பப்பட்டது. மத அமைப்புகள் பொதுவாகவே அதன் கோட்பாடுகளில் குறிப்பிடுகையில், ஆண்கள் மட்டுமே கடவுளாக இருந்திட முடியும் என்று சித்தரிக்கப்படுகிறது. ஆனால் கிரேக்க நாகரீகத்தின் கோட்பாட்டின்படி கடவுளுக்கு எந்த பாலினமும் கிடையாது. எந்த பாலினத்தையும் குறிக்கும் வகையில் கடவுள் இருந்தது இல்லை என்கிறது.

கிறிஸ்தவ மதம், ஜுடாய்சிம் போன்ற மதங்கள் கடவுள் கண்டிப்பாக ஆணாகத்தான் இருக்க முடியும். கடவுளை குறிக்கும்பொழுது ‘அவர், அவனுடைய, அவன்’ என்று அழைக்கின்றனர். ஆண் கடவுள் எப்பொழுதும் நற்பண்புகள் உடையவர்களாகவும், பெண்கள் தீய செயல்களை உடையவளாகவும் சித்தரிக்கப்படுகிறாள் என்று கூறுகிறது. இதுவும் ஒருவகையான ஆண் ஆதிக்க மனப்போக்கு என்று பலரும் விமர்சிக்கின்றனர்.

பெண்ணிய கோட்பாடுகளும், தத்துவங்களும் :

மதம் என்று பார்க்கும்பொழுது பெண்களுக்குச் சாதகமாக எந்த மதமும் இல்லை என்ற நிலையுள்ளது. மதங்கள் பெண்கள்மீது உள்ள தங்களுடைய பார்வையை மாற்றியமைத்திட வேண்டும். மதங்கள் அனைத்தும் பழமையான வழிமுறைகள், தத்துவங்களை மாற்றியமைத்திட வேண்டும். பெண்களுக்கு பாதகம் இல்லாமல் இருக்க வேண்டும் என்று பெண்ணியவாதிகள் நீண்டகாலமாக கூறி வருகின்றனர்.

மதம் பெண்கள்மீது ஒரு சுரண்டல் முறையைக் கையாளுகிறது. பெண்களுடைய பங்கு மதத்தில் அதிகமாக இருந்தாலும், ஆண் ஆதிக்க சிந்தனை மதங்களில் திணிக்கப்படுகிறது. பெண் என்றால் குழந்தை பெறுதல், தாய்மையடைதல் என்று தன்னுடைய வாழ்க்கையை மதமே தீர்மானிக்கிறது என பெண்ணிய தத்துவங்கள் கூறுகின்றன. குறிப்பாக பெண்கள் மதங்களால் புறக்கணிக்கப்படுகிறார்கள். பெண்ணிய முன்னேற்றத்திற்கு மதங்கள் தடையாக இருக்கிறது என பெண்ணியக் கோட்பாடுகள் கூறுகின்றன. அது தவிர கடவுள் பொதுவாகவே பெண்ணாகத்தான் இருந்திட முடியும் என்றும் கூறுகின்றனர்.

பாலினம் மற்றும் கடவுள் :

பாலினம் மற்றும் கடவுள் பற்றிய விவாதங்கள் பல்வேறு இடங்களில் வேறுபட்டுக் கொண்டு இருக்கிறது. கடவுள் ஆணாக இருக்க முடியும் என்று பல மதங்கள் கூறுகிறது. இவை ஒருவகையான ஆணாதிக்க மனப்போக்கை மக்கள்மீது திணிக்கிறது. மதங்களில் பெண் கடவுள்கள் இருந்தாலும், முதன்மையாக ஆண் கடவுள்களைத்தான் அதிகம் வழிபடுகிறார்கள்.

பெண்ணியவாதிகளின் கருத்து அடிப்படையில் பெண் தெய்வங்களைப் பின்பற்றுபவர்கள் எண்ணிக்கை குறைவு. ஆண் தெய்வங்களுக்கே அதிக முக்கியத்துவம் சமூகத்தில் வழங்கப்படுகிறது. பெண் தெய்வங்களை பொதுவாக மென்மையாகவும், செல்வங்கள், செழிப்பு, தாய்மையடைதல், அழித்தல், நோய் உண்டாக்குதல் போன்ற செயல்களுக்கு மட்டுமே உரியவர் என சித்தரிக்கவும் செய்கின்றனர்.இதுபோன்ற முரண்பாடுகள் மேற்கத்திய மதங்களிருந்து உருவானவை. பழமையான பழக்க வழக்கங்களால் உருவாக்கப்பட்டவை.

காலத்திற்கு ஏற்ப மதங்கள் ஆண், பெண் தெய்வங்களை உருவாக்கின. இவை அனைத்தையும் பின்பற்றும்பொழுது இதற்கான முரண்பாடுகள் தொடங்குகின்றன. ஆண் தெய்வங்கள் மிகவும் சக்தியடைந்தவர்கள் போலவும், பெண் தெய்வங்கள் மென்மையானவர்களாக உருவாக்கப்பட்டன. பெண் தெய்வங்கள் இவ்வாறு சித்தரிப்பது ஒரு தவறான சுரண்டல் முறையே. இது ஆண் ஆதிக்க சமுதாய சிந்தனையை கடவுளுக்கிடையேயும் நிலவச் செய்கின்றன.

கிறிஸ்தவ மதத்தில் பெண்ணியம் :

கிறிஸ்தவ மதத் தத்துவங்களின் அடிப்படையில் ஆண், பெண் இருவரும் சமமானவர்கள். இதில் எந்தவிதமான பாகுபாடுகளும் கிடையாது. முதலில் ஆண், பெண் சமத்துவத்தை பற்றிய புரிதல் இருந்திட வேண்டும். இருவரும் சமுதாய ரீதியாகவும், கலாச்சார ரீதியாகவும் சமமானவர்கள். இதன் மூலம் ஆளுமை திறன் மற்றும் ஆன்மீகத்தை அடைய முடியும் என கிறிஸ்தவம் கூறுகிறது.

கிறிஸ்தவ பெண்ணியவாதிகள் கூறுகையில் கடவுள் யாரையும் பாகுபாடாகவோ அல்லது வேற்றுமையுடனோ பார்ப்பதில்லை. ஆண், பெண் பேதம் பார்ப்பதில்லை, பாலினம் மற்றும் இனம் என்று மிகைப்படுத்துவதில்லை. ஆனால் இவர்கள் கூறும் வாதமானது கிறிஸ்தவ திருமணங்களில் ஆண்களுடைய ஆதிக்கம் அதிகமாக காணப்படுகிறது. பெண்களுக்கு என்று சமமான வழிபாடு, பாலியல் உரிமைகள்,பெண் கடவுள்களுக்கு மதிப்பளிப்பது, பெண் போதகர்கள் மற்றும் பெண் பாதிரியார்களை உருவாக்கிட வேண்டுமென்று பெண்ணியவாதிகள் கூறுகின்றனர்.

இஸ்லாமும் பெண்ணியமும் :

பெண்கள் இஸ்லாமியத்தில் முழு சமத்துவம் பெறுவதே இதன் குறிக்கோளாக இருந்து வந்துள்ளது. பாலின வேறுபாடுகள் இன்றி பொது வாழ்க்கை மற்றும் தனிநபர் வாழ்க்கையில் பெருமளவு சமத்துவம் பெற வேண்டுமென்கின்றது.

பெண்ணுரிமைகள், பாலின சமத்துவம், சமூக நீதி போன்றவை இஸ்லாமிய கட்டமைப்புகளுக்குள் வர வேண்டும் என இஸ்லாமிய பெண்ணியவாதிகள் கூறுகின்றனர். குரானில் கூறப்படும் இறை வாசங்களைப் பின்பற்றினால் பெண்ணியம் போற்றும் செயலாக இருக்கும். குரானில் கூறப்படும் செய்திகள், அனைத்தும் சமத்துவம் சார்ந்த செயல்களாக வேரூன்றியுள்ளதை நன்கு அறியலாம். இதே போல் ஆண் ஆதிக்க சிந்தனையை கடுமையாகச் சாடியும், சமூகத்தில் எவ்வாறு சமத்துவம் பெறுவதற்கான வழிகளையும், சட்டங்களையும் தன்னுடைய புனித நூல்களிலும் கூறிவந்துள்ளது.

ஒருபுறம் இவ்வாறு கூறியிருந்தாலும் இதனை யாரும் பின்பற்றுவதில்லை. மாறாக பெண்கள்மீது அடக்குமுறை, வன்முறை, ஆடை கட்டுபாடு போன்ற செயல்களில் பாலின வேறுபாட்டை காட்டி வருகிறது என்று பெண்ணியவாதிகள் கூறுகின்றனர். ஆகவே பல பெண்கள் இதற்காக போராட வெளியே வரவும் செய்கின்றனர்.

இந்து மதமும், பெண்ணியமும் :

இந்து மத தத்துவங்கள் பெண்களை மிகவும் உயர்வான நிலையில் நடத்திட வேண்டுமென்று குறிப்பிடுகிறது. ஆண்களைப்போல் பெண்கள் மிகவும் மரியாதைக்குரியவர் மற்றும் சமமானவர் என்று கூறுகிறது.மனுஸ்மிருதியில் பெண்களைப் பற்றி கூறும்பொழுது “ஒரு சமூகம் பெண்ணை மரியாதையுடன் நடத்திட வேண்டும், ஆனால் ஒரு சமூகம் பெண்ணை இழிவாக நடத்தினால் அங்கு பல இடையூறுகளும்,பிரச்சினைகளையும் அவர்கள் சந்திக்க நேரிடும்” என்று கூறுகின்றது. எனினும் பெண்களை இழிவாகவே நடத்துகின்றனர்.

வேதங்களிலும் பெண்களை மிகவும் மரியாதைக்குரியவராக, சமத்துவமானவளாக நடத்தப்பட்டது. வேத காலத்தில் பெரும்பாலும் ரிஷிகள் பெண்களாகவே இருந்தனர். ரிக் வேதத்தில் குறிப்பிடுகையில் பல பெண் ரிஷிகளுடைய பெயர்கள் இடம் பெறுகின்றன. இவர்களில் கோஷா, கோதா, கார்கி, அபாயா, உபனிஸ்த், பிரமஜெயா, இந்திராணி, சார்மா, ஊர்வசி போன்ற பலர் இருந்தனர். இவர்களும் ஆண்களைப் போல் பிரம்மச்சரியம் கடைபிடித்து, முக்தியடைந்ததாக கூறுகின்றன.

பல ஸ்லோகங்கள் பெண்களை அடிப்படையாகக்கொண்டு உச்சரிக்கப்படுகிறது. சமணம், சைவம், வைஷ்ணவமாக இந்து மதம் பிரிந்த பொழுது, பெண்ணிய வழிபாடு முறையான சக்தி உதயமானது.பெண்களுடைய வழிபாட்டு முறைகள் மற்றும் பெண்கள் அனைவரும் புகழ், பொருள், வளம், சத்தியம் போன்றவற்றிற்கு நிகரானவர்களாகக் கருதப்பட்டனர். நவீன காலகட்டங்களில் இவை அனைத்தும் எதிர்மறையாக இருந்து வந்துள்ளது. கலாச்சாரம் என்ற பெயரில் ஆண்கள் பெண்கள்மீது வன்முறை, அடக்குமுறை போன்ற பல கொடுமைகளை செய்கின்றனர் என பெண்ணியவாதிகள் கூறுகின்றனர்.

சீக்கிய மதமும் பெண்ணியமும் :

பெண், ஆணுக்கு நிகரானவர் என்று குரு கரன்த் சாஹிப் கல்வெட்டுகளில் குறிப்பிடப்படுகிறது. பெண்களை இழிவாக நடத்தக் கூடாது, சுயமரியாதையுடனும், பண்போடும் நடத்திட வேண்டும் என்கிறது.

சீக்கிய மத குருவான குருநானக் பெண்ணைப் பற்றி கூறும்பொழுது, ஒரு பெண்ணிலிருந்து, ஆண் உருவாகிறான். ஒரு ஆண், பெண்ணை திருமணம் செய்து கொள்கிறான். அவ்வாறு நடக்கும்பொழுது பெண்,ஆணுடைய நண்பராகிறாள். பெண்ணின் மூலம் புதிய தலைமுறையை உருவாக்கித் தருகிறாள். ஆனால் அவள் இறந்துவிட்டால், ஆண் இன்னொரு பெண்ணை நாடிச் செல்கிறான், அவளுடன் குடும்பம் நடத்துகிறான். இதனால் பெண்ணை ஏன் தவறாக என்ன வேண்டும். பெண்ணிலிருந்து பல ராஜாக்கள், இளவரசர்கள் பிறக்கிறார்கள். பெண்ணிலிருந்து பெண் பிறக்கிறாள், எனவே பெண்ணில்லாமல் யாரும் இருக்க முடியாது என்று கூறுகிறார்.

சீக்கிய மதங்களில் பெண்ணிற்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கப்படுகிறது. இவ்வாறு இருந்தாலும் பெண்களை ஆண்கள் சமமாக கருதுவதில்லை. இதன் விளைவு பெண்களுடைய எண்ணிக்கை ஆணுக்கு நிகராக இல்லை.

License

Icon for the Creative Commons Attribution-NonCommercial-NoDerivatives 4.0 International License

மதங்களின் பார்வையில் பெண்கள் by creative commons Attribution-NonCommercial-NoDerivatives 4.0 International. is licensed under a Creative Commons Attribution-NonCommercial-NoDerivatives 4.0 International License, except where otherwise noted.

Share This Book

Feedback/Errata

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *