6 மதமும் ஆடைகளும்

மதம் தோன்றிய காலம்முதல் இன்றுவரை பல்வேறு வகையான ஆடைகள் பின்பற்றப்படுகிறது. ஒரு மதத்திலிருந்து இன்னொரு மதத்தை மிகைபடுத்தி காட்டுவதற்காகவும், ஆடை, சடங்குகள், வழிபாடு போன்றவை பெரிதும் அமைகிறது. மதம் பெண்களுக்குச் சுதந்திரம் கொடுத்துள்ளதா என்று கேட்டால் இல்லை என்றுதான் கூறியாக வேண்டும். விருப்பமான ஆடை அணிவதற்கு மதம் எந்தவிதமான சுதந்திரத்தையும் பெண்களுக்கு அளித்ததில்லை. மாறாக அடக்குமுறையையும், ஆணாதிக்க மனப்போக்கையும் தந்துள்ளது. இன்றும் பல்வேறு மதத் தலைவர்கள் கூறும் ஒரு வாதம் பெண்கள் உடுத்தும் ஆடையால் பெருமளவு வன்முறை நடக்கிறது. பெண்கள் கண்ணியமான ஆடைகளை அணியுங்கள் என்று பெண்கள்மீது ஆடை கட்டுப்பாட்டை விதிக்கின்றனர். பல்வேறு இடங்களில் உடைக்கு எதிரான வன்முறையும், எதிர்ப்பும் வந்து கொண்டுதான் இருக்கிறது.

இஸ்லாமிய பெண்களும் ஆடையும் :

இஸ்லாமிய பெண்களைப் பொறுத்தவரை ஆடைக் கட்டுப்பாடு மிகவும் முக்கியமானது. ஆடையின்மீது அதிக கட்டுபாடுகள் விதிக்கப்படுகிறது. இஸ்லாமிய பெண்களுக்கு ஆடை உடுத்துவதில் சமத்துவம் கிடையாது. ஆணாதிக்க மனப்போக்கின் காரணமாக கட்டுப்பாடுகளான சமூகமாகவே இஸ்லாம் பெண்கள் பெரிதும் நடத்தப்படுகின்றனர். ஆடைக் கட்டுப்பாடுகளை மீறும்பொழுது அவர்கள் மீதான தாக்குதல் அதிகப்படியாக நடத்தப்படுகிறது. பல்வேறு இஸ்லாமிய நாடுகளில் இவை பின்பற்றப்பட்டு வருகிறது.

பெண்கள் எந்த ஆடையை அணிந்தாலும் அதனுடன் புர்கா அல்லது நிக்காப் என்னும் ஆடையை அணிய வேண்டும். இந்த ஆடை தலைமுதல் கால் வரை முழுவதும் மூடப்பட்டு இருக்க வேண்டும். கைகள் மற்றும் கால்கள் மட்டுமே வெளியே தெரியவேண்டும். முகம் முழுவதும் மூடியும் பார்ப்பதற்கு மட்டும் ஒரு சிறிய துவாரம் இருக்கும். இஸ்லாமியக் கோட்பாட்டின் அடிப்படையில் பெண்கள் தன்னுடைய முகத்தை அல்லது உடலை கணவருக்கு மட்டும் காட்டவேண்டும். பிற ஆண்கள் பார்க்கக்கூடாத வகையில் புர்கா என்னும் ஆடை அணிய வேண்டும். பெண்கள் கண்ணியமான முறையில் ஆடை அணிந்திட வேண்டும்.ஆபரணங்கள், நகைகள் போன்றவை வெளியே தெரியாதவாறு ஆடை அணிந்திட வேண்டும் என்கிறது.

புர்கா ஆடையை அறிவியல் பூர்வமாக பார்க்கும்பொழுது அன்றைய ரோமானிய ஆப்பிரிக்க டெர்முலியன் கிறிஸ்தவர்கள் புர்கா அணிந்தனர். இந்த ஆடை பாலைவன மணலிருந்தும், பாலைவன புயலிருந்தும் பாதுகாத்துக் கொள்வதற்காக பின்பற்றப்பட்டு வந்தன என்கின்றனர். அரபு மற்றும் பெர்ஷிய நாட்டுப் பெண்களால் புர்கா பெரிதும் உடுத்தப்பட்டதால் இதை இஸ்லாமிய பெண்கள் பின்பற்ற மிகப்பெரிய காரணமாக அமைந்துள்ளது.

இஸ்லாமியக் கோட்பாட்டின்படி புர்கா அணிவது ஒரு மரபு. மனிதன் உருவாக்கிய ஹீஜாப்பில் ஆண், பெண் எவ்வாறு ஆடை உடுத்த வேண்டும் என்று கூறுகிறது. ஆனால் ஆண்கள் ஆடை கட்டுபாடுகளை பெரிதும் பின்பற்றுவதில்லை. இவை பெண்கள்மீது மட்டுமே திணிக்கப்பட்டு வருகிறது என்று கூறலாம். பல்வேறு இஸ்லாமிய நாடுகளில் பெண்கள் புர்கா அணிவதை கட்டாயமாக்கப்பட்டுள்ளது. அவ்வாறு புர்கா அணியவில்லை என்றால் கைது செய்தல், தாக்குதல், கவுரவக் கொலைகள் போன்றவை நடத்தப்படுகிறது. இவற்றிற்குப் பயந்து பல்வேறு பெண்கள் புர்கா அணிகிறார்கள். எனினும் புர்கா அணிவது அவர்களுடைய விருப்பம் மற்றும் உரிமை என்கின்றனர். இவ்வாறு இருந்தாலும் இந்தியா, பாகிஸ்தானில் இஸ்லாமிய பெண்கள் உடுத்தும் ஆடையின்மீது எந்தவிதமான கட்டுபாடுகளும் கிடையாது. புர்கா அணிவது அவர்களுடைய உரிமை சார்ந்தது என்கிறார்கள்.

ஆப்கானிஸ்தானில் உள்ள தலிபான்கள் பெண்கள் கட்டாயமாக நிக்காப் அணிய வேண்டும் என்று கட்டுபாடு விதித்துள்ளனர். இது மீறப்படும்பொழுது இவர்கள்மீது வன்முறை தாக்குதல் நடத்தப்படுகிறது.தண்டனைகளிலிருந்து பெண்கள் தப்புவதற்காக இந்த ஆடைகளை ஏற்றுக் கொள்கிறார்கள். துருக்கி நாட்டில் இஸ்லாமிய பெண்கள் பெருமளவு புர்கா அணிவதில்லை. மதச்சார்பின்மை கொள்கையால் ஆடை கட்டுப்பாடு பெண்களுக்கு இல்லாமல் போனது.

துருக்கி மற்றும் துனிஷிய நாடுகளில் பள்ளிகள், அலுவலகங்கள், பல்கலைக் கழகங்களில் பெண்கள் ஹீஜாப்கள் உடுத்துவதை தடை செய்துள்ளது. சவூதி அரேபியா, ஈரான் நாடுகளில் ஆடைக் கட்டுபாடுகளை தளர்த்தவில்லை. இதனை கண்காணிக்க மதக்காவலர்களை நியமித்து ஆடைக் கட்டுப்பாட்டை மீறுபவர்கள்மீது கடும் தண்டனைகளை வழங்கி வருகிறது.

மேலை நாடுகளில் இஸ்லாமிய பெண்கள் புர்கா அணிவதில் உள்ள பிரச்சினைகளை இஸ்லாமிய போபியா என்று கூறுகின்றனர். இதில் பல்வேறு பாதுகாப்புப் பிரச்சினைகளை, பல்வேறு நாடுகள் சந்தித்த வண்ணம் இருக்கிறோம் என்கின்றனர். பிரான்ஸ், நெதர்லாந்து, அமெரிக்கா போன்ற நாடுகளில் முகம் முழுவதும் மூடும் புர்காவிற்கு தடை விதித்துள்ளது. பல்வேறு அரசு உதவிகளை பெறுவதற்கு பெரும் தடையாக புர்கா உள்ளது. இதற்கு முக்கிய காரணமாக இருப்பவை, அடையாளப்படுத்துவதில் மிகவும் கடினமாக உள்ளது. ஓட்டுனர் உரிமை வழங்குவதிலும் மற்றும் பல்வேறு உரிமங்களை வழங்குவதில் சிக்கல் ஏற்படுகிறது என்கிறது. பல்வேறு குற்றங்களை செய்துவிட்டு போலீஸிடம் இருந்து மறைந்துகொள்ள இது உதவுகிறது. இதனால் பல நாடுகளில் புர்காவிற்கு தடை விதிக்கப்படுகிறது.

புர்கா அணிவதால் பல்வேறு உடல் பாதிப்புகளை இஸ்லாமிய பெண்கள் சந்திக்கின்றனர். வைட்டமின் D குறைபாடு ஏற்படுகிறது, தோல்புற்று நோய், மார்பகப் புற்று நோய் ஏற்பட அதிக வாய்ப்புள்ளதாக பிரிட்டிஷ் ஆய்வு கூறுகிறது. புர்கா அணிவது இஸ்லாமிய பெண்களுடைய மரபு, அவர்களுடைய உரிமை என்று பலரும் கருதுகின்றனர். உலகளவில் மேற்கொண்ட ஆய்வில் 33% முஸ்லீம் பெண்கள் புர்கா அணிவது தவறு என்கின்றனர். அதே சமயத்தில் பல பெண்கள் புர்காவை எதிர்க்கின்றனர்.

இந்து மதத்தில் ஆடை :

இந்து மதத்தைப் பொறுத்தவரை வேத காலத்து கலாச்சார முறையே இன்றளவும் பின்பற்றப்பட்டு வருகிறது. அதில் மிகப்பெரிய பங்கினை சேலை ஆற்றி வருகிறது, பெண்களுடைய பாரம்பரிய ஆடையாகவே இன்றளவும் சேலை பின்பற்றப்பட்டு வருகிறது. திருமணங்களில் தொடங்கி பல்வேறு சுபகாரியங்கள், துக்கம் போன்றவற்றிற்கு சேலை பயன்படுத்தப்பட்டு வருகிறது.

இந்தியா, இலங்கை, நேபாளம், பாகிஸ்தான் போன்ற நாடுகளிலும் சேலை பெருமளவு பயன்படுத்தப்பட்டு வருகிறது. சேலை ஒவ்வொரு மாநிலத்திற்குத் தகுந்தவாறு மாறுபடுகிறது என்று கூறலாம். ஒரு இந்து பெண்ணை அடையாளம் காண்பது எளிது. நெற்றியில் சிகப்பு பொட்டு வைப்பதும், குங்குமம் இடுவதும், பெண்கள் திருமணம் ஆனவர்களா, இல்லையா என்று தெரிந்து கொள்ள முடியும். இந்துப் பெண்களைப் பொறுத்தவரை பருவமடைந்தஉடன் காலில் கொலுசு போடுவது வழக்கமாக இருக்கிறது. இதற்கு அவர்கள் கூறும் விளக்கம் காத்து, கறுப்பு பெண்ணை அண்டாமல் இருக்கும் என்கின்றனர். இதேபோல் திருமணமானவர் என்று காட்டுவதற்கும் மெட்டி பயன்படுத்துவது வழக்கமாக இருந்து வந்துள்ளது. ஆடையுடன் பெருமளவு நகைகளை சேர்த்துக் கொள்வதும் அழகுபடுத்தி காட்ட வளையல்கள், ஆபரணங்கள் போன்றவற்றை பயன்படுத்துகின்றனர்.

உலகமயமாக்கல் கொள்கையால் பல்வேறு வகையான மேற்கத்திய ஆடையை இந்துப் பெண்கள் பயன்படுத்துகின்றனர். இதனை ஏற்றுக் கொள்ளாதவர்கள் பெண்கள்மீது தாக்குதல் நடத்துகின்றனர்.பெண்ணுக்கு ஏற்ற ஆடை சேலை, சோலி. இதனையே பயன்படுத்த வேண்டும் என்று இந்து அமைப்புகள் போராடுகின்றனர். பெண்கள் மேற்கத்திய உடைகளை அணிவதால் கலாச்சாரம் கெட்டுவிட்டதாகக் கூறி அவர்களுக்கு எதிராக சிலர் போராடுகின்றனர்.

கிறிஸ்தவ பெண்களும் ஆடையும்:

கிறிஸ்தவ மதத்தில் ஆடைக்கு என்று எந்தவிதமான கட்டுப்பாடும் கிடையாது. ஆடை என்பது அவர்களுடைய விருப்பம், எதை வேண்டுமென்றாலும் உடுத்தலாம். ஆனால் அநாகரிகமாகவோ அல்லது கண்ணியமற்ற முறையிலோ ஆடையை உடுத்தக் கூடாது என்கிறது. இதேபோல் ஆதாம், ஏவாள் காலத்தில் நிர்வாணமாக வாழ்ந்தனர். எப்போது பாவம் செய்தார்களோ அன்று முதல் ஆடையின் தேவையை உணர்ந்தார்கள் என்று பைபிளில் கூறப்படுகிறது.

ஆடைக் கட்டுப்பாடு கன்னியாஸ்திரிக்கும், போதகர்களுக்கும் மட்டும் பொருந்தும் என்று கூறுகிறது. இதர பெண்களைப் பொறுத்தவரை எந்தவிதமான ஆடைக் கட்டுப்பாடுகளும் கிடையாது. புதுமைக்கு தகுந்தவாறு ஆடைகளையும் கிறிஸ்துவ பெண்கள் மாற்றி வருகிறார்கள்.

சீக்கிய பெண்களும் ஆடைகளும் :

சீக்கிய பெண்களை பொறுத்தவரை ஆடை சுதந்திரம் இருந்தாலும், இவர்கள் பழமையான ஆடைகளை பெரிதும் விரும்புகிறார்கள். சீக்கியர்கள் பொதுவாகவே தலைப்பா கட்டுவது வழக்கம். சீக்கிய ஆண்கள் மற்றும் பெண்கள் பெருமளவு தலைப்பா கட்டுகிறார்கள். இன்று இவர்கள் மாற தொடங்கிவிட்டனர். நவீன மேற்கத்திய ஆடைகளை பயன்படுத்த ஆரம்பித்து விட்டனர். சீக்கியர்கள் அனைவரும் தலைப்பா கட்டுவது கிடையாது.

சீக்கிய பெண்கள் சல்வார்கமிஸ், மேற்கத்திய ஆடைகள், சேலை, சுடிதார் போன்ற ஆடைகளை உடுத்துகிறார்கள். எந்தவிதமான எதிர்ப்பையும் சீக்கிய ஆண்கள் தெரிவிப்பதில்லை. ஆடையைப் பொறுத்தவரை பெண்களுடைய விருப்பம். பெண்கள் மற்றவர்கள் மதிக்கும் வகையில் ஆடை உடுத்திட வேண்டும் என்று மட்டும் கருதுகின்றனர்.

புத்த பெண்களும் ஆடையும் :

புத்த மதத்தில் பெண்கள் ஆடை அணிவது பற்றி எந்தவிதமான கட்டுப்பாடுகளும் கிடையாது. ஆடை என்பது அவரவர் நாட்டிற்குத் தகுந்த மாதிரி மாற்றியமைத்து கொள்ள வேண்டும். எந்த ஆடை அவர்களுக்கு பொருத்தமாக உள்ளதோ அதனை அணியலாம். புத்த பெண்கள் புத்த முத்திரை பொறிக்கப்பட்ட ஆபரணங்களை கழுத்தில் போட்டுச் செல்வார்கள்.

புத்த துறவிகளைப் பொறுத்தவரை ஆடைக் கட்டுபாடு உள்ளது. தலையை மொட்டையடித்து, ஆரஞ்ச் நிற ஆடைகளை பயன்படுத்த வேண்டும். செருப்பு அணியாமல் வெறும் பாதங்களில் நடக்க வேண்டுமென்று கூறப்பட்டுள்ளது.

 

License

Icon for the Creative Commons Attribution-NonCommercial-NoDerivatives 4.0 International License

மதங்களின் பார்வையில் பெண்கள் by creative commons Attribution-NonCommercial-NoDerivatives 4.0 International. is licensed under a Creative Commons Attribution-NonCommercial-NoDerivatives 4.0 International License, except where otherwise noted.

Share This Book

Feedback/Errata

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *