7 வாக்குரிமை

ஆண்களுக்கு மட்டுமே வாக்கு அளிக்கும் உரிமை வழங்கப்பட்டிருந்தது. பெண்களுக்கும் வாக்குரிமை வழங்க வேண்டும் என்கிற இயக்கம் பிரான்சு நாட்டில் (1780-90) தோன்றியது. அன்டோனி கண்டர்செட்(Antoine Condorcet), ஒலிம்ப் டீ கௌக்ஸ் (Olympe de Gouges) ஆகியோர் முக்கிய பங்கு வகித்தனர். தேர்தலில் பங்கேற்கும் உரிமை பெண்களுக்கும் வழங்கப்பட வேண்டும் என்று கோரிக்கை எழுப்பினர். உலகம் முழுவதும் ஆங்காங்கே சமூக சீர்திருத்தவாதிகள் போராடினர்.

சுவீடன், பிரிட்டிஷ் மற்றும் ஐக்கிய அமெரிக்க நாடுகளின் சில மேற்கு மாகாணங்களில் வாக்களிக்கும் உரிமையை 1860ஆம் ஆண்டுகளில் பெற்றனர். பிரிட்டிஷ் குடியேற்றப் பகுதியாக இருந்த நியூசிலாந்து நாடு, வளர்ந்த எல்லாப் பெண்களுக்கும் வாக்குரிமை வழங்கிய முதல் நாடாக 1893இல் சிறப்புற்றது. ஆஸ்திரேலிய குடியேற்றப் பகுதியில் பெண்கள் 1895இல் வாக்குரிமை பெற்றனர்.

ஐரோப்பிய நாடுகளில் பெண்களுக்கு முதன் முதலாக வாக்களிக்கும் மற்றும் தேர்ந்தெடுக்கும் உரிமை பின்லாந்து நாட்டில் 1907ஆம் ஆண்டில் வழங்கப்பட்டது. பெண்கள் நாடாளுமன்றத்திற்குத் தேர்ந்தெடுக்கப்பட்டனர். இந்தியாவில் 1919இல் தான் பெண்களுக்கு வாக்களிக்கும் உரிமை வழங்கப்பட்டது. ஆனால் படித்த மற்றும் சொத்து உள்ள பெண்கள் மட்டுமே வாக்களிக்கும் தகுதி பெற்றவர்கள் என்பதால் மிகச் சிலரே வாக்களித்தனர்.

அனைத்து நாடுகளிலும் பெண்கள் போராடியே தங்கள் வாக்குரிமையை பெற்றனர். பெண் வாக்குரிமை ஒரு மனித உரிமை என ஐ.நா. அமைப்பு 1979இல் தனது அறிக்கையில் கூறியது. இருப்பினும் சில நாடுகளில் பெண்களுக்கு வாக்களிக்கும் உரிமை மறுக்கப்பட்டது. 2008ஆம் ஆண்டில்தான் பூட்டான் நாட்டில் பெண்கள் வாக்களிக்கவும், வேட்பாளர்களாக போட்டியிடும் உரிமையைப் பெற்றனர்.

பெண்களும் சொத்துரிமையும் :

பெண்களுக்கு ஆரம்பகாலம் முதல் இன்றுவரை சொத்துக்களை வைத்துக் கொள்ளும் உரிமை கிடையாது. உலகளவில் பெண்களுக்கு என்று 1% மட்டுமே சொத்துக்கள் உள்ளன. இதுவும் பல்வேறு போராட்டங்கள் மூலமே சாத்தியமான ஒன்றாக இருந்து வருகின்றன. உலகளவில் ஆணுக்கு சமமான விகிதத்தில் பெண்களுக்கு சொத்தில் பங்கில்லை என்று கூறலாம். ஒரு சில பெண்கள் மட்டுமே சொத்துக்களை வைத்துள்ளனர். வணிகம் செய்பவர்கள், தொழிற்சாலைகள், பங்குச் சந்தை, ஊடகம், நடிகைகள் போன்றவர்கள் மட்டுமே சொத்துக்களை தங்கள் பெயரில் வைத்துள்ளனர்.

இந்தியாவைப் பொறுத்தவரை பெண்கள் பல போராட்டங்கள் நடத்திய பிறகுதான் சொத்துரிமை கிடைக்கும் வாய்ப்பினை பெற்றனர். உலகில் உள்ள பல்வேறு நாடுகளில் வாழும் பெண்களை ஒப்பிடும் பொழுது இந்திய பெண்களுக்கு சமமான சொத்துரிமை என்பது மறுக்கப்பட்டே வந்துள்ளது. ஆண்களைவிட மிகவும் குறைவான அளவில் சொத்துரிமை வழங்கப்படுகின்றன. சொத்துரிமையைப் பொருத்தவரை வீட்டில் தொடங்கி மதம்வரை அனைவரும் மாறுபட்டே இருக்கிறார்கள். பல்வேறு மதங்களில் தனிச்சட்டங்கள் மூலம் சொத்துரிமை நிர்வகிக்கப்படுகிறது. தனிச்சட்டத்தின் அடிப்படையிலேயே பெண்களுடைய சொத்துரிமையும் பார்க்கப்பட்டு வருகிறது. இது தவிர மதத்திற்குள்ளே உள்ள பல்வேறு மத குழுக்கள் கலாச்சார ரீதியாகவும், பழக்க வழக்கங்களால் பெண்களின் சொத்துரிமையைத் தீர்மானிக்கின்றனர்.

மண்ணிலும் பாதி, விண்ணிலும் பாதி. – மாசேதுங்

இந்து, சீக்கியம், பவுத்தம், ஜைனம் போன்றவை ஒருங்கிணைந்த சொத்துரிமை சட்டத்தை 1956ஆம் ஆண்டு கொண்டு வந்துள்ளது. அதேபோல் கிறிஸ்தவம் தனிப்பட்ட சட்டங்களை வகுத்து செயல்பட்டு வருகிறது. இஸ்லாம் மதம் தன்னுடைய சொத்துரிமை பற்றிச் சரியாக குறிப்பிடவில்லை. பழங்குடியின பெண்களுக்கு என்று ஒரு தனிப்பட்ட பழக்க வழக்கங்கள் மூலம் சொத்து நிர்வாகிக்கப்படுகிறது. மதச் சட்டத்தின் அடிப்படையிலேயே பெண்களுக்கு சொத்துரிமை என்பது வழங்கப்படுகிறது. ஆகவே இந்தியாவில் வாழும் அனைத்துப் பெண்களுக்கும் ஒரே மாதிரியான சொத்துரிமை கிடையாது. பின்பற்றும் மதத்தின் அடிப்படையிலேயே சொத்து கிடைக்கும் என்கிற நிலை உள்ளது.

இந்து பெண்களின் சொத்துரிமை :

இந்து பெண்களுக்குச் சொத்துரிமை என்பது இன்றளவும் மறுக்கப்படுகிறது. பெண் குழந்தைகள் பிறந்தாலே பாவமாக பார்க்கும் வகையில் தான் மதமும், மனுவிலும் கூறப்படுகிறது. பெண் குழந்தைகள் பிறந்தாலே அதிக வரதட்சணை வழங்க வேண்டும். இந்த நிலையுள்ளதால் பெண் சிசுக் கொலைகள் நடக்கின்றன. இதற்கு முன்னோடியான மாநிலமாக பஞ்சாப், ஹரியானா, ராஜஸ்தான், தமிழ்நாடு போன்றவை இடம்பெற்று வந்துள்ளது.

பெண்களுக்கு என்று எந்தவிதமான சொத்துகளும் கொடுக்கக் கூடாது என்று மனுவில் கூறப்படுகிறது. மாறாக 8 வயதில் பால்ய விவாகம் செய்யும்பொழுது வரதட்சணையாக பொருட்களை வழங்கலாம்.அதற்குப் பதிலாக தந்தையின் சொத்து அல்லது பூர்வீகச் சொத்தில் சொந்தம் கொண்டாட இயலாது. பெண்களுக்கு சொத்தில் பங்களிப்பது ஒரு கெட்ட செயலாகவும், உலகமே அழிந்துவிடும் என்று நம்பினர்.நேருவின் ஆட்சிக் காலத்தில் ‘ஹிந்து கோடு பில்’ (Hindu Code Bill) டெல்லியில் கொண்டு வரப்பட்டது. பெண்களுக்கு சொத்துரிமை மற்றும் சொத்தில் பங்கு கொடுக்க வேண்டும் என்று பாராளுமன்றத்தில் மசோதா கொண்டு வரப்பட்டது.

இப்படியொரு செய்தி நாடு முழுவதும் பரவியதும் பெண்களுக்கு சொத்தில் பங்கு கொடுப்பதைத் தடுத்து நிறுத்த வேண்டும். இந்த மசோதாவை தாக்கல் செய்வதைத் தடுத்து நிறுத்த வேண்டுமென்று பல்வேறு இந்து அமைப்புகள் இந்தியாவில் போராட்டங்களை நடத்தினர். பல்வேறு இடங்களில் பெண்களே எங்களுக்கு சொத்தில் பங்கு வேண்டாம். மனு ஸ்மிருதியில் உள்ளபடி பெண்களுடைய தர்மத்தை காப்பாற்று என்று பெண்கள் தீர்மானம் போட்டனர்.

இந்த மசோதாவிற்கு எதிராக பல்வேறு தீர்மானங்களைப் போட்டு டெல்லிக்கு தந்தி அனுப்பும் போராட்டங்களும் நடந்து வந்தன. மறுபுறம் பெண்களுக்குச் சொத்துரிமை வழங்க வேண்டும், அவர்களுக்கும் சொத்தில் பங்குண்டு என்று பல முற்போக்கு அமைப்புகள் போராடின. இதன் காரணமாக இந்த மசோதா நிறைவேற்றப்பட்டது.

இந்து மத வாரிசுகள் சட்டம் :

இந்து மத வாரிசுகள் சட்டம் 1956 இல் கொண்டு வரப்பட்டது. இந்த சட்டமே பெண்களுக்கு அதிகாரபூர்வமாகவும், சீரான சட்டமாகவும் பெண்களுக்கு அமைந்திட்டது. இந்து மதம் பல்வேறு ஏற்றத்தாழ்வான சமூகமாகவே இருந்தாலும் பெண்களுக்கு சொத்தில் பங்கு வழங்கிட முன்வந்தது.

இந்து மத பெண்கள் சொத்துரிமைச் சட்டம் 1937இல் வந்துள்ளது. அதில் விதவைகளுக்கு சொத்துரிமை கிடையாது. ஆனால் 1956இல் வந்த சட்டமானது விதவைகளுக்கு சொத்துரிமையை முதன் முதலாக வழங்கியது. சுதந்திரத்திற்குப் பிறகு உருவாக்கப்பட்ட முதல் பெண்கள் சார்ந்த சட்டமும் இதுதான் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இது அனைத்து இந்து மத குழுக்களுக்கும் பொருந்தும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது என்பது இதன் சிறப்பாகும்.

இதன் அம்சங்கள்:

1. பெண்களுக்கு வழங்கப்பட்ட குறைந்தளவு சொத்து உரிமைகள் முழுமையான ஒன்றாக மாற்றப்பட்டது.

2. விதவை பெண்களுக்கும், திருமணமாகாத பெண்களுக்கும் சொத்தில் அங்கீகாரம் வழங்கப்பட்டது.

3. ஒரு குறிப்பிட்ட வர்க்கத்தின் வாரிசுகள், ஒரே நேரத்தில் எல்லா சொத்துகளில் பங்குகொள்ள முடியும் என்னும் நிலை அறிமுகப்படுத்தப்பட்டது.

4. மிட்டாக்ஷாரா அடிப்படையில் உள்ள சொத்துகள் அனைத்தும் இந்து சட்டத்தின்கீழ் செல்லும். ஆனால் பெண் வாரிசுகள் இருந்தால் அவர்களுக்கும் சொத்தில் பங்குண்டு. எந்த காரணத்தாலும் அவர்களை புறக்கணிக்கக் கூடாது.

5. மறுமணம், மதமாற்றம் போன்ற காரணங்களைக் கூறிச் சொத்தில் பெண்களுக்கு பங்கில்லை என்று மறுக்க முடியாது.

6. கருவில் உள்ள குழந்தை ஆணாகவோ அல்லது பெண்ணாகவோ இருந்தாலும் அவர்களுக்கும் சொத்தில் பங்குண்டு.

இந்து பெண்களுக்கு திருமணத்தின்பொழுது சீதனம் வழங்கப்பட்டது. அவை மட்டுமே பெண்களுடைய சொத்தாக இருந்தது. ஆனால் இந்து மத வாரிசுகள் சட்டம் 1937இல் வந்த பிறகு ‘குறைந்தளவே சொத்தில் பங்கு’ என்று கூறியது. இது பிரிவு 14ன் கீழ் முழுமையான சொத்துரிமையை பெற்றுக் கொள்ளலாம் என்று, “சுப்ரீம் கோர்ட் வி. துலஸ்லாமா Vs வி.சேஷாரெட்டி வழக்கில் பிரிவு 14 (1) (2) இந்து மத வாரிசுகள் சட்டத்தின் கீழ் பெண்களுடைய சொத்துரிமையைப் பற்றி கூறியுள்ளது.”

இந்த சட்டங்கள் மேலும் மறுஆய்வுக்கு உட்பட்டு 2005ஆம் ஆண்டு இந்து மத வாரிசுகள் சட்டம் புதுப்பிக்கப்பட்டது. ஆண், பெண் இருவருக்கும் சொத்தில் சரிபாதியான பங்குண்டு என்று பல்வேறு சட்டத்திருத்தங்களுடன் வெளிவந்துள்ளது. இந்தியாவில் பெண் தலைமையான குடும்பங்கள் 20% முதல் 35% உள்ளனர். ஆனால் இவர்களுக்கு சொத்தில் பங்கு என்பது மிகவும் குறைவாகவே உள்ளது.

இஸ்லாமிய பெண்கள் சொத்துரிமை :

இந்திய இஸ்லாம்கள் இரண்டு வகையான பிரிவுகளைச் சார்ந்துள்ளனர். இதில் ஷியா மற்றும் சுன்னத் இவற்றில் அடங்கும். சுன்னத் பிரிவு இந்தியா முழுவதும் பெரிதும் பின்பற்றப்பட்டு வருகிறது. இதில் நான்கு உட்பிரிவுகளை கொண்டு இயங்கி வருகிறது. அதில் ஹானாபிஸ், ஷாபிஸ், மாளிக்ஸ், ஹன்பாலிஸ் உள்ளன.

இந்தியா, பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், துருக்கி போன்ற நாடுகளில் அதிகளவில் ஹானாபிஸ் உள்ளனர். ஷியா மற்றும் சன்னி சட்டம் அதிகளவில் பின்பற்றப்பட்டு வருகிறது. இந்த சட்டங்கள் இதற்கு முன்பு ஹனாபி சட்டமாக பயன்படுத்தப்பட்டு வந்துள்ளது.

1937 வரை இஸ்லாம் சட்ட மரபுகள் அடிப்படையில் சொத்துகள் பிரிக்கப்பட்டன. பல்வேறு ஏற்றத்தாழ்வுகளால் சரியான நீதி, சொத்துரிமை போன்றவை மறுக்கப்பட்டதால் இதற்கு என்று ஒரு சட்டம் உருவாக காரணமாகிவிட்டது.

1937 இல் ஷரியத் சட்டம் கொண்டுவந்தபொழுது இந்தியாவில் உள்ள இஸ்லாம்கள் இந்த சட்டத்தின்கீழ் நிர்வகிக்கப்பட்டனர். இதில் தனி நபர், சொத்துரிமை சம்மந்தப்பட்ட விசயங்கள் சேர்க்கப்பட்டு இருந்தன. இந்த சட்டத்தில் எந்தவிதமான ‘சீர்திருத்தமோ’ அல்லது ‘குறியீடுகளோ’ மாற்றம் செய்யவில்லை. மாறாக ஆணாதிக்க சிந்தினையுடன் கையாண்டு வருகின்றன.

இந்து வாரிசு சட்டங்களிலிருந்து, இஸ்லாமிய வாரிசு சட்டங்கள் பல்வேறு மாற்றங்களைக் கொண்டுள்ளது. அதில்,

(i) குரான் சில தனிநபர்களுக்கு சொத்தில் பங்கினை உறுதியளிக்கிறது.

(ii) சொத்தில் பங்கு என்னும் உரிமை கருவில் உள்ள குழந்தைக்கும் பொருந்தும்.

(iii) 1/3 பங்கு சொத்துகளை உயிலாக சொத்துக்காரர் எழுதி வைக்கலாம்.

இஸ்லாமிய பரம்பரை சட்டத்தின்கீழ் பெண்களுடைய சொத்துரிமை பற்றி சில மரபுகளை பின்பற்றுகிறது. இதில்,

(i) கணவன் அல்லது மனைவி ஒரே வாரிசுகளாக கருத வேண்டும்.

(ii) பெண்கள் மற்றும் உடன்பிறந்தோர் சொத்தில் பங்குகோர தகுதியானவர்கள்.

(iii) பொது விதியின் அடிப்படையில் பெண்களுக்கு, சொத்தில் ஒரு பங்கினை ஆணுக்கு நிகராக வழங்கப்பட வேண்டும்.

பெண்களுக்கு புதிதாக உருவாக்கப்பட்ட மரபுகள் அடிப்படையில் இறந்தவரின் சொத்தில் சமமான பங்குள்ளது. எனினும் ஆணின் சொத்தில் பாதி வழங்கப்படும். (.கா) தங்கை மற்றும் அண்ணன் இருவருக்கும் சொத்தில் பங்குண்டு. எனினும் ஆணுக்கு இரண்டு பங்கும், பெண்ணுக்கு ஒரு பங்கும் சொத்து வழங்கப்படுகிறது.

முகமதியன் சட்டத்தின்கீழ் ஒவ்வொரு இஸ்லாம் வாரிசும் உறுதியான சொத்து பகிர்வினை மரபு உரிமைகள் மூலம் அறியப்படுகிறது. அதிகார பகிர்வு உரிமையின் மூலம் ஒருவர் இறந்தபிறகு சொத்தில் பங்கினை பற்றி முகமதியன் சட்டம் விளக்கமளிக்கிறது. எனவே பிரதிநிதித்துவ உறுப்பினர்கள் அல்லது காப்பாளர்கள் அங்கீகரிக்கப்படுவதில்லை. அசையும் சொத்து மற்றும் அசையாச் சொத்து என்று எந்த வித்தியாசமும் இல்லை என்கிறது.

இதேபோல் ஹனாபி சட்டங்களில் பெண்களுக்கு உள்ள சொத்துரிமைகளைச் சொல்கிறது. ஹனாபி சட்டமானது வாரிசு முறைகளை ஏழு வகையாகப் பிரிக்கிறது. மூன்று முக்கியமானவையாகவும், நான்கு துணை ஒப்பந்தங்களாகவும் சேர்த்துள்ளது. மூன்று முக்கியமான ஒப்பந்தங்கள் குரானிக் வாரிசு முறையைப் பற்றியும், ஆண் பரம்பரையின் மூலம் வாரிசு ஒப்பந்தம் மற்றும் கருப்பை வாரிசுகள் ஒப்பந்தம் என்று பிரிக்கப்பட்டுள்ளது.

குரானிக் வாரிசு சட்டப்படி கணவன், மனைவி இருவருமே முதன்மை வாரிசுகள். இவர்களை யாரும் பிரிக்க இயலாது. இருவரில் யாரையும் ஒதுக்கிவிட முடியாது. தங்களுடைய சொத்தின் பங்கினை மனைவிக்கு சரியாக ஒதுக்க வேண்டும். ஆனால் கருவில் குழந்தைகள் இருந்தால் சொத்தின் பங்கினை குறைக்கவும் செய்யலாம். தந்தை மற்றும் சகோதரிகள் தவிர மற்றவருக்கும் குரானிக் வாரிசு சட்டத்தின்படி சொத்தில் பங்குண்டு.

ஒருவர் இந்த சட்டத்தின்கீழ் தானாகவே சொத்திலிருந்து விலகிக் கொண்டால், இது பிறரையும் பாதிக்கும். தாய், தந்தை மற்றும் இரண்டு சகோதரிகள் உயிருடன் இருக்கும்பொழுது, தந்தை இரண்டு சகோதரிகளுக்கு பொறுப்பு ஏற்பதில்லை. எனினும் தாயின் 1/6 பங்கு சொத்தில் உரிமை கொண்டாட முடியும்.

வகுப்பு II (Class II) இதில் ஆண்கள் I (Group I) சொத்தில் உரிமையுண்டு, பெண்கள் II (Group II) மற்றொரு ஆண் வழி உறவினருக்கும் உரிமை கோர முடியும், குழு III (Group III) மற்றொரு உறவினர் மூலம் சொத்தில் உரிமை கோர முடியும்.

ஹலாடு சட்டத்தில் ஆண் குழந்தைகள், மகளின் மகன், தந்தை, சகோதரர், தந்தைவழி மாமா, அவருடைய மகன் போன்றவர்கள் இந்த சொத்தில் பங்கு கோரலாம். இவ்வாறு ஹலாடு சட்டத்தில் ஆண்கள் அதிகாரம் படைத்தவர்களாக உள்ளனர். இரண்டாவது பெண்கள் நான்கு விதமாக பிரிக்கப்படுகிறார்கள். பெண்கள், ஆண் உறவினர்களுடன் சமமாக இருக்கும் பொழுது, மகள் (மகன்), மகனின் மகள், சிறியவர்,பெரியவர் என்ற ஏற்றத்தாழ்வு மூலம் பெண்களுக்கு சொத்து பிரிக்கப்படுகிறது.

இன்றளவும் இஸ்லாமிய பெண்கள் சொத்தில் சரிசமமான பங்கீனை பெற முடிவதில்லை. இதற்கு முக்கிய காரணம் போதுமான கல்வியறிவு இல்லாமை, ஆணாதிக்க மனப்போக்கு, சமூக ஏற்றத்தாழ்வுகள் போன்றவையே. மக்கள்தொகையின் அடிப்படையில் இஸ்லாமியர்கள் அதிகம் வாழும் நாடுகளில் இந்தியா இரண்டாவது இடத்தில் உள்ளது. இருந்தாலும் இஸ்லாமிய பெண்களுக்கு கல்வியறிவு, வேலை வாய்ப்பு, சொத்துரிமை போன்றவை மறுக்கப்பட்டு வருகிறது. பல இஸ்லாமிய பெண்கள் கல்வியறிவு பெறாத காரணத்தால் எளிதில் இவர்கள், ஆண்களால் சுரண்டப்படுகிறார்கள். இதன் மூலம் ஆணாதிக்க மனப்போக்கிற்கு இவர்கள் ஆளாகின்றனர்.

கிறிஸ்தவ, பார்சிய பெண்களும் சொத்துரிமையும் :

இந்திய வாரிசுகள் சட்டம் 1925இன் கீழ் பிரிவு 31 முதல் 49 பிரிவின்படி கிறிஸ்தவர்களுக்கும், பிரிவு 50 முதல் பிரிவு 56 வரை பார்சி இனத்தவர்க்கும் ஒதுக்கப்பட்டுள்ளது.

கிறிஸ்தவ பெண்கள் சொத்தில் பங்கினை பெற முழு உரிமையுண்டு. பிற வாரிசுகள் சொத்தில் பங்கு கோருவது கட்டுப்படுத்தப்படுகிறது. விதவைப் பெண்ணுக்கு மூன்றில் ஒரு பங்கு சொத்து உண்டு. கணவர் யார் பெயரிலும் உயில் எழுதவில்லை என்றால் அந்த சொத்து முழுவதும் அந்த விதவை பெண்ணுக்கே சேரும். தந்தை இறந்தபிறகு, தாய், சகோதரர்கள், சகோதரிகள் உயிருடன் இருந்தால் அனைவருக்கும் சரியான பங்கினை வழங்க வேண்டும். கணவர் இறந்துபோனால், எந்த சொந்தங்களும் இல்லையென்றால் முழு சொத்தும் மனைவிக்குச் சொந்தமாகிவிடும்.

பார்சிப் பெண்களை பொறுத்தவரை சொத்தில் மிகவும் சமமான பங்கினை வழங்குகிறது, விதவை பெண்ணாக இருந்தாலும், குழந்தைகள், மகன், மகள் போன்ற அனைவருக்கும் சொத்தில் சரி பங்குண்டு. உயில் எழுதவில்லையென்றால் பெற்றோர்கள், தந்தை மற்றும் தாய், குழந்தைக்கு சொத்தில் பாதி பங்குண்டு.

License

Icon for the Creative Commons Attribution-NonCommercial-NoDerivatives 4.0 International License

மதங்களின் பார்வையில் பெண்கள் by creative commons Attribution-NonCommercial-NoDerivatives 4.0 International. is licensed under a Creative Commons Attribution-NonCommercial-NoDerivatives 4.0 International License, except where otherwise noted.

Share This Book

Feedback/Errata

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *