5

இன்றைய காலகட்டத்தில் கல்வி மிகப்பெரிய மாற்றத்தை பெண்களிடத்தில் அளித்து வந்துள்ளது. பெண்ணுக்கு கல்வி பெறுவது அன்று முதல் இன்றுவரை பல்வேறு மாற்றங்களை கண்ட வண்ணம் இருந்து வந்துள்ளது. பெண்கள் கல்வி பெறுவது என்பது மிகப்பெரிய விஷயமாக கருதப்பட்டு வந்தது. மதங்கள் பெண் கல்வியை அங்கீகரித்தாலும், பல்வேறு மதங்கள் பெண்கல்வியை மறுத்து வந்துள்ளது. ஆனால் இன்று அனைவரும் கல்வி பயிலலாம் என்கிற மாற்றம் ஏற்பட்டுள்ளது.

இஸ்லாமும் பெண் கல்வியும் :

இஸ்லாமிய மதமானது பொதுவான கருத்தை வழிமொழிகிறது. அதற்கு ஏற்றார்போல் தன்னுடைய புனித நூலான குரானில் பெண் கல்வியைப் பற்றியும் அதனுடைய கடமைகளைப் பற்றியும் எடுத்துக் கூறுகிறது. ஒரு பெண் ஞானம் பெறுவது கல்வியின் மூலமே. இது ஒரு அடிப்படையான கடமையாகும். ஆண், பெண் என்ற பாகுபாடு அல்லாவிற்கு கிடையாது, கல்வி என்பது பொதுவான செயலாகும். இதன் மூலம் உலக ஞானம் பெறமுடியும் என்கிறார் நபிகள். ஒவ்வொரு இஸ்லாமியப் பெண் மற்றும் இஸ்லாமிய ஆண் ஞானம் பெறுவது கல்வியின் மூலமே. எனவே கல்வி இருவருக்கும் ஒரு அடிப்படையான கடமையாக இருந்து வந்துள்ளது.

வரலாற்று ரீதியாக நாம் பார்க்கும்பொழுது பெண்கள் கி.பி. 859ஆம் ஆண்டில் பல்வேறு கல்வி நிறுவனங்களில் பயின்று வந்தனர். அதில் கரோனி பல்கலைக்கழகம் மிகவும் பிரபலமானது. பின்னர் 12ஆம் நூற்றாண்டிலிருந்து 13ஆம் நூற்றாண்டுவரை ஆட்சி செய்த ஆயுதத் வம்சம் பெண் கல்விக்கு உதவித் தொகைகள் வழங்கி வந்தது. முகமது நபியின் மனைவியான கத்திஜா கல்வி பெற்று மிகச் சிறந்த பெண் தொழிலதிபராக விளங்கினார். இதற்குக் காரணம் பெண் கல்வியை நபிகள் அதிகளவு ஊக்குவித்தார் என்பதாகும்.

இஸ்லாமியக் கோட்பாடுகள் அடிப்படையில் ஆணும், பெண்ணும் கல்வியறிவு பெறுவது ஒரு அடிப்படையான உரிமை என்றாலும் கல்வி மத கட்டுப்பாடுகளையும், கட்டளைகளையும் சார்ந்தே இருந்து வந்துள்ளது. பெண்கள் பொதுவாக மத அடிப்படையிலே கல்வி கற்க முடியும். குறிப்பாக போதனைகள், மசூதிகளில் பொது இடங்களில் மட்டுமே பயிலும் சூழ்நிலை இருந்துள்ளது. பெண்கள் கல்வி பயில்வது மிகவும் கடினமான ஒன்றாக இருந்து வந்துள்ளது. பள்ளிகள் சென்றோ அல்லது கல்லூரிக்குச் சென்று பயில்வது எளிதானதாக இருந்தது கிடையாது என்று அறிஞர்கள் கூறுகின்றார். இன்றைய காலகட்டத்தில் கூட இஸ்லாமியப் பெண்கள் கல்வி கற்பது மிகவும் கடினமான ஒன்றாகவே இருந்து வருகிறது. மதத்தில் உரிமை கூறி இருந்தாலும் நடைமுறையில் ஆணாதிக்க மனபோக்கு கல்வியிலும், வேலைவாய்ப்பு பெறுவதிலும் பெண்களுக்கு இடையூறாக உள்ளது. இஸ்லாமியப் பெண்களுக்கு கல்வியறிவை பெற்றுத் தருவதை இஸ்லாமிய ஆண்கள் விரும்புவதில்லை. அதிகம் படித்தால் ஆண்களை கேள்வி கேட்பார்கள்.பெண் கேள்வி கேட்பது தவறு என்னும் ஆணாதிக்க மனப்போக்கை இஸ்லாமிய பழமைவாதிகள் கடைபிடிக்கிறார்கள்.

கல்வி கற்பதில் மிகவும் பின்தங்கி இருப்பவர்கள் இஸ்லாம்கள்தான். அதிலும் குறிப்பாக இஸ்லாம் பெண்கள் கல்வி கற்பதில் மிக மிகப் பின் தங்கியுள்ளனர். இஸ்லாம் ஒருபோதும் பெண்களைக் கல்வி கற்க வேண்டாம் என தடை போடவில்லை. அந்நிய ஆண்களும், அந்நிய பெண்களும் இரண்டறக் கலந்து விடக் கூடாது எனக் கருதியே மத பழமைவாதிகள் கல்வி கற்பதற்கு தடை விதிக்கின்றனர். பல்வேறு இடங்களில் பெண் கல்வி கற்பது தடை செய்யப்பட்டுள்ளது. இதை மீறும் பெண்கள்மீது தாக்குதல் நடத்துவதோடு, வன்முறைகளைத் தூண்டியும் விடுகின்றனர்.

ஆப்கானிஸ்தான் மற்றும் பாகிஸ்தானின் சில பகுதிகளில் பெண்கள் கல்வி கற்கக் கூடாது என மத தீவிரவாதிகள் எதிர்ப்பு தெரிவித்து வந்தனர். பெண்கள் கடைகளுக்குச் செல்லக் கூடாது எனக் கட்டுப்பாடு விதித்தனர். இந்த சூழலில் பாகிஸ்தானைச் சேர்ந்த மலாலா யூசப்சாய் என்கிற 14 வயது மாணவி பெண் கல்வியை ஊக்குவிப்பதற்கான பிரச்சாரம் செய்தார். மலாலாவை தலிபான் மதத் தீவிரவாதிகள் சுட்டனர்.உயிருக்குப் போராடிய மலாலாவிற்கு இங்கிலாந்து அரசு இலவச சிகிச்சை அளித்து உயிரைக் காப்பாற்றியது. தற்போது பெண் கல்விப் போராளியாக மலாலா உலகளவில் பிரபலம் அடைந்துவிட்டார்.

அரபு நாடுகளில் மூன்றில் ஒரு பெண் படிப்பறிவு இல்லாதவராக இருக்கிறார். இதில் பாதி பெண்கள் அடிப்படைக் கல்வி பெறுவதற்குப் போராட வேண்டி உள்ளது. உலகில் அதிக இஸ்லாம் மக்கள் தொகை கொண்ட நாடுகளான இந்தோனேஷியா, வங்க தேசம், பாகிஸ்தான், அரபு நாடுகளில் பெண் கல்வி மிகவும் குறைவாக உள்ளது.

இந்தியாவைப் பொறுத்தவரை இஸ்லாம் ஆண்கள் 63% மற்றும் இஸ்லாம் பெண்கள் 50% எழுத்தறிவு பெற்றுள்ளனர். பிற மதங்களை ஒப்பிடும்பொழுது இஸ்லாம் பெண்கள் எழுத்தறிவில் மிகவும் பின்னடைவைப் பெற்றுள்ளனர். இஸ்லாம்கள் இந்தியாவில் 17 கோடி பேர் உள்ளனர். உத்திர பிரதேசம், பீஹார் மாநிலங்களில் அதிகளவில் இஸ்லாம்கள் வாழ்கின்றனர். ஆனால் எழுத்தறிவு என்று பார்த்தால் 35.6% உள்ளது.கேரள மாநிலத்தில் அதிகளவு இஸ்லாம் பெண்கள் எழுத்தறிவு பெற்றுள்ளனர். இதைத் தொடர்ந்து ஆந்திரா, தமிழ்நாடு, கர்நாடகம் உள்ளது. வட மாநிலங்களைப் பொறுத்தவரை ஹரியானாவில் இஸ்லாம் பெண்கள் எழுத்தறிவில் மிகவும் பின்தங்கியுள்ளனர். தொடக்கக் கல்வியில் இஸ்லாம் பெண்கள் அதிகளவில் படித்தாலும் இடைநிலை கல்வியில் நிறுத்தப்படுகிறார்கள். இதற்குப் பல்வேறு காரணங்கள் முன் வைக்கப்படுகிறது.

வறுமை அரசு சலுகைகளில் பாராமுகமான தன்மை.

இஸ்லாம் ஆண்கள் வர்த்தகம், கைவினைப் பொருட்கள் மற்றும் இதர தொழில்களில் ஈடுபடுகின்றனர். எனவே இடைநிலைக் கல்வியுடன் இவர்கள் நின்று விடுகிறார்கள்.

இஸ்லாம் பெண்கள் அதிகம் படித்து இருந்தால், படிக்காத ஆண்களுக்குத் திருமணம் செய்து கொடுப்பது கடினம். இதனால் பெண்கள் இடைநிலைக் கல்வியுடன் நிறுத்தப்படுகிறார்கள்.

இஸ்லாம் பெண்கள் பருவமடைந்த உடன் ஆரம்ப அல்லது தொடக்கக் கல்வியிலிருந்து நிறுத்தப்படுகிறார்கள்.

உருது பள்ளிகள் இன்றும் பழமையான கல்வியை போதிப்பதால் நடைமுறையில் உள்ள கல்வி வளர்ச்சிக்கு ஈடுகொடுக்க இயலவில்லை.

இஸ்லாமியர் கல்வி நிறுவனங்கள் ஆரம்பித்தாலும் பெண்களுக்கு முன்னுரிமை கொடுப்பதில்லை.

பெண்கல்வியும் இந்துமதமும் :

பெண் கல்வியைப் பொறுத்தவரை ஆண், பெண் வேற்றுமை பெரிதும் உள்ளது. இந்து மதத்தில் பல பெண் தெய்வங்கள் இருந்தாலும், கல்விக் கடவுளாக சரஸ்வதி தேவியை வணங்குகிறார்கள். எனினும் பெண்கள் கல்வி கற்பது என்பதற்கு முக்கியத்துவம் கொடுக்கப்படுவதில்லை.

இந்தியாவில் இந்து மதத்தைப் பின்பற்றுபவர்கள் 80% பேர். ஆண்கள் மட்டுமே அதிகளவு எழுத்தறிவு பெற்றவர்களாக இருக்கிறார்கள். பண்டைய காலம் முதல் இன்றுவரை பெண்ணுக்கு கல்வி மறுக்கப்பட்டே வருகிறது. இந்து மதத்திலிருந்து பிரிந்த புத்தம், ஜைனம் மற்றும் சிறுபான்மையான மதங்களான சீக்கியம் போன்ற மதங்களில் பெண்கள் அதிகளவில் படித்தவர்களாகவும், எழுத்தறிவு பெற்றவர்களாகவும் இருக்கிறார்கள். இந்து மதத்தில் உள்ள பெண்கள் தொடக்கக் கல்வியை 70% படிக்கிறார்கள். ஆனால் அதற்குமேல் படிக்கும் பெண்களின் எண்ணிக்கை விகிதம் மிகவும் குறைந்து விடுகிறது.

பெண்ணுக்குக் கல்வியென்பது மிகவும் அவசியமானது என்று இந்து மதம் கூறுகிறது. ஆனால் கல்வி கற்பது முக்கியமற்றதாகவும், அது எப்பொழுதும் இரண்டாம் இடத்தில்தான் பெண்களுக்கு வைக்கப்பட்டு இருந்தது. பெண் ஆண்களைப்போல் பள்ளிகளுக்குச் சென்று படிக்க முடியாது. பெண்கள் வீட்டினை பராமரிப்பது, பிற சடங்குகள் செய்வதில் திறம்பட இருந்ததாக வேதங்கள் கூறுகிறது. பெண்கள் திருமணம் செய்வதற்குமுன்பு வீட்டில் சம்மந்தப்பட்ட அனைத்து வேலைகளில் தேர்ச்சி பெற்றவராக இருக்க வேண்டும். சமையல், கைவினைப் பொருட்கள், வீடுகளை பராமரித்தல், அழகு, கலை போன்ற 64 துறைகளில் தேர்ச்சி பெற்றவளாக இருந்தால் மட்டுமே பெண், கல்வி அறிவு பெற்றவராக கருதப்பட்டனர்.

இந்தியாவில் இந்துப் பெண்கள் கல்வியறிவு பெறுவதில் பின்தங்கியே உள்ளனர். இதற்கு இந்து சமூகம் இன்றும் ஆணாதிக்க சமூகமாகவே இருந்து வருகிறது. சில மதங்களில் பெண்களுக்கு உள்ள அடிப்படை சுதந்திரம்கூட இந்து பெண்கள் பெறுவதில்லை. இந்து மதத்திலிருந்து பிரிந்த மதங்கள் பெண்களுடைய கல்வி, எழுத்தறிவிற்கு அதிக முக்கியத்துவம் அளிக்கின்றது. தென் இந்தியாவில் இந்துப் பெண்கள் அதிகளவில் எழுத்தறிவு மற்றும் கல்வி பெற்று இருக்கிறார்கள். இதற்குக் காரணம் சமூக சீர்திருத்தவாதிகளின் பங்களிப்பாகும். வட இந்தியாவில் எழுத்தறிவு மற்றும் கல்வியறிவு பெற்றவர்கள் மிகவும் குறைவாகவே உள்ளனர் இந்துப் பெண்கள் அதிகளவு கல்வி பெறுவதை பெற்றோர்களே விரும்புவதில்லை. இதற்குப் பழமைவாதக் கருத்தே அடிப்படைக் காரணமாக உள்ளது.

வட இந்தியாவின் பல்வேறு ஊர்களில் கப் பஞ்சாயத்து என்ற பெயரில் பெண் கல்வி மறுக்கப்பட்டு வருகிறது. நகரங்களில் பெண்கல்வியில் முன்னேற்றங்கள் ஏற்பட்டாலும், கிராமப்புறங்களில் பெண்கல்விக்கு முக்கியத்துவம் கொடுப்பதில்லை. வறுமை போன்ற சமூக பிரச்சினைகள், மூட நம்பிக்கைகள் போன்ற முரண்பாடான கருத்துகளால் பெண்கல்வி முழுமைபடாமல் இருந்து வருகிறது.

ஆங்கிலேயர்கள் கல்வியில் செய்த மாற்றங்கள் மற்றும் இந்து மதத்தில் பெண் கல்வியில் இருந்த முரண்பாடான கருத்துகளால் பலர் கிறிஸ்தவ மதத்தை தழுவ ஆரம்பித்தனர். தாழ்த்தப்பட்டோர், மலைவாழ் மக்களுக்கு இந்து மதத்தில் கல்வி மறுக்கப்பட்டது. கல்வியில் ஏற்பட்ட பிரச்சினைகள் சாதி பிரச்சினைகள் அனைத்தையும் கருத்தில் கொண்டு கல்வி, மருத்துவம், நல உதவிகள் பெறுவதற்கு பலர் கிறிஸ்தவத்தை நாடினர்.

இவர்களை தக்க வைத்துக் கொள்ள பல்வேறு சிறுபான்மையான கல்வி நிறுவனங்களை கிறிஸ்துவ மதம் தொடங்கி கல்வி, மருத்துவம் போன்ற சேவைகளை செய்து வந்தனர். இவர்களை தக்கவைத்துக்கொண்டு கிறிஸ்தவத்தை நாடு முழுவதும் பரப்புவதே இதன் பெரும் நோக்கமாகவே கொண்டனர்.

கிறிஸ்தவ மதமும், பெண் கல்வியும்

கிறிஸ்தவ மதம் பெண் கல்வியைப் பற்றிக் கூறும்பொழுது, பெண்கள், ஆண்களுக்குக் கீழ்ப்படிந்தவராக இருக்க வேண்டும். ஆனால் பெண் கல்வியைப் பொறுத்தவரை 76% எழுத்தறிவு பெற்று இருக்கிறார்கள்.இதற்கு முக்கிய காரணம் கிறிஸ்தவ மதம் அதிகளவில் கல்வி, சேவை, மருத்துவம், நலத்திட்டங்களில் பெருமளவில் ஏழை, எளிய மக்களுக்கு செய்து கொடுத்ததே ஆகும்.

கல்விக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்ததால் ஆண், பெண் பேதமின்றி கல்வி கற்றனர். பல்வேறு உதவிகளால் இருபாலரும் கல்வி கற்க முடிந்தது. கிறிஸ்தவ மதத்தில் பிற சிறுபான்மை மதங்களைவிட ஓரளவு எழுத்தறிவு பெற்றவர்களாக உள்ளனர். பைபிளைப் பொறுத்தவரை பெண் கல்வியைப் பற்றி முரண்பாடான கருத்து இருந்து வந்துள்ளது. பெண்கள், கல்வியறிவைப் பெற வேண்டுமென்றால் ஒன்று கணவன் மூலமாகவோ அல்லது பிற ஆணிடம் கேட்டுத் தெரிந்து கொள்ள வேண்டும். பெண்கள் சர்ச்சுகளில் பேசக் கூடாது, மதம் சார்ந்த எந்த கேள்வியையும் எழுப்பக் கூடாது. வழிபாடுகளின்பொழுது கேள்விகள் கேட்கக் கூடாது. அவ்வாறு சந்தேகங்கள் எழுந்தால் தங்களுடைய கணவரை கேளுங்கள் என்கிறது.

பெண்கள் எப்பொழுதும் ஆணுக்குக் கீழ்ப்படிந்தவர்களாக இருக்க வேண்டும், அவரே கடவுள் அருளைப் பெற்றவர். ஒரு ஆணிலிருந்துதான் பெண் உருவாக்கப்பட்டுள்ளதால், ஆண் அதிகம் தெரிந்தவனாக சொல்லப்படுகிறது. எந்தவிதமான, சந்தேகங்கள் எழும்பொழுதும் தன்னுடைய கணவனிடமோ அல்லது ஆண் தலைவர்களிடமோ கேட்டுக் கொள்ளுங்கள் என்று கூறுகிறது. ஒரு பெண் பேசுவது, கேள்வி கேட்பது தவறு, இது மதத்திற்கே ஒரு அவமதிப்பு என்கிறது.

கிறிஸ்தவ மதத்தில் பெண் கல்விக்கு முக்கியத்துவம் கொடுத்தாலும், இந்தியாவைப் பொருத்தவரை பெண் கல்வி மறுக்கப்பட்ட ஒன்றாகவே உள்ளது. மத மாற்றத்தின் மூலம் ஒரளவு கல்வியறிவு பெற்று இருந்தாலும் அவை முழுமை பெற இயலவில்லை என்னும் நிலைதான் இன்றும் உள்ளது. எனினும் ஓரளவிற்கு பொருளாதார மாற்றத்தை பெண்களுக்கு வழங்கியுள்ளது என்று கூறலாம்.

பிற மதங்களில் பெண் கல்வி :

பிற மதங்களிலும் பெண் கல்வி பின்தங்கிய நிலையில்தான் உள்ளன. இந்தியாவைப் பொறுத்தவரை ஜெயின மதத்தில் 90% கல்வியறிவு பெற்றுள்ளனர். இந்து மத முரண்பாடுகளால் இம்மதத்திலிருந்து வெளியேறியவர்கள் அதிகம் படித்தவர்களாக இருக்கிறார்கள். சீக்கிய மதத்தில் 64%, பவுத்த மதத்தில் 70%, இஸ்லாம் 50%, கிறிஸ்தவத்தில் 76% என பெண்களுடைய கல்வி நிலை உள்ளது என ஆய்வுகள் கூறுகிறது.

பெண் கல்வியைப் பொறுத்தவரை இந்துக்கள் தொடக்கக் கல்விக்கு (75%) பெண்களை அனுப்புகிறார்கள். இடைநிலை, மேல்நிலை கல்விக்குச் செல்லும்பொழுது குறைவானவர்களே கல்வி பயில்கின்றனர். பிற மதங்களில் 90% பெண்களை தொடக்கக் கல்விக்கு அனுப்பினாலும் இதிலும், உயர்கல்வி செல்லும்பொழுது குறைவான பெண்களே செல்கின்றனர்.

எழுத்தறிவு பெறாத பெண்கள் என்று பார்த்தால், இந்தியாவில் சுமார் 59.5% இஸ்லாம் பெண்கள் உள்ளனர். இதைத் தொடர்ந்து இந்து மதத்தில் 42.2%, கிறிஸ்தவத்தில் 22.7%, ஜைனத்தில் 10%, பவுத்தத்தில் 30%உள்ளனர்.

பெண் கல்வி மூலம் பல பெண்கள் சாதித்துக்கொண்டு இருக்கிறார்கள். அனைத்துத் துறைகளிலும் பெண்கள் சாதித்துக் கொண்டு இருக்கிறார்கள். சில மத எதிர்ப்புகளையும் கடந்து, பெரிய நிலைக்கு வருகிறார்கள் என்பது உண்மை. மதங்களில் முரண்பாடான கருத்துக்களை நீக்க வேண்டும். பெண் சமத்துவம் என்பது கல்வி மூலமே சாத்தியம் என்று அனைவரையும் உணரவைக்க வேண்டும் என கல்வியாளர்கள் கூறுகின்றனர்.

License

Icon for the Creative Commons Attribution-NonCommercial-NoDerivatives 4.0 International License

மதங்களின் பார்வையில் பெண்கள் Copyright © 2014 by creative commons Attribution-NonCommercial-NoDerivatives 4.0 International. is licensed under a Creative Commons Attribution-NonCommercial-NoDerivatives 4.0 International License, except where otherwise noted.

Share This Book