2

மதமும், அறிவியலும் அன்றைய காலம் முதல் இன்றுவரை மிகப்பெரிய சர்ச்சைக்கு உள்ளாகிக் கொண்டுதான் வருகிறது. மனிதன் முதன்முதலில் நெருப்பு கண்டுபிடித்ததிலிருந்து மதத்திற்கும், அறிவியலுக்கும் போட்டியையும் சர்ச்சையையும் உண்டாக்கிய வண்ணம் இருந்து வந்துள்ளது. அறிவியலானது அறிவு சார்ந்த செயல்களை அடிப்படையாகக் கொண்டுள்ளது.

அறிவியல்முறை ஆய்வுக்குட்பட்டது மற்றும் எதார்த்தமானது. மதமானது நம்பிக்கை சார்ந்தது மற்றும் புனிதமானது என்று பிரிக்கப்படுகிறது. எனினும் இரண்டும் வெவ்வேறானது என்று பல்வேறு அறிஞர்கள் கூறுகின்றனர்.

மதத்திற்கும், அறிவியலுக்கும் மிகப்பெரியளவில் சர்ச்சைகள் அன்று முதல் இன்றுவரை இருந்து வந்துள்ளது. அவை ஒன்றோடு ஒன்று போட்டி போட்டுக் கொண்டுதான் இருக்கிறது என்று பல்வேறு அறிஞர்கள் கூறுகின்றனர். அறிவியலும், மதமும், மனிதனிடையே வெவ்வேறு அனுபவங்களை கொண்டு சேர்த்துள்ளது. அவை அதன் எல்லையின் உள்ளே இருக்கும்வரை மட்டும் இவ்வாறு இருக்கிறது. அவை ஒன்றோடு ஒன்று மோதும்பொழுது மிகப்பெரிய சர்ச்சைக்கு உட்படுத்தப்படுகிறது என்று கூறுகின்றனர்.

மதமும், அறிவியலும் வெவ்வேறு துறைகளாக இருந்தாலும் பல்வேறு மதங்கள் அறிவியலை ஏற்றுக்கொள்கின்றன. சில நேரங்களில் மதங்கள் அறிவியலை எதிர்க்கவும் செய்கின்றன. மனிதன் கடவுளால் படைக்கப்பட்டான் என மதங்கள் கூறுகின்றன. ஆனால் மனிதன் பரிணாம வளர்ச்சி மூலமே தோன்றினான் என அறிவியல் ஆதாரத்துடன் நிரூபித்துள்ளது. சாதி, மதம், இனம், மொழி என்கிற பாகுபாடு அறிவியலுக்குக் கிடையாது. ஆனால் மதம், மனிதனை சாதி, இனம் என்று பிரித்துப் பார்க்கிறது.

புத்த மதம் :

புத்த மதம் கடவுள் இல்லை என்கிறது. அறிவியலோடு பெருமளவில் பொருந்திப் போகிறது. சில தத்துவங்கள் மற்றும் மனரீதியான போதனைகள் அனைத்தும் மேற்கத்திய அறிவியல் கோட்பாடுகளை அடிப்படையாகக் கொண்டுள்ளது என்கின்றனர். புத்த மதம், இயற்கையை பல்வேறு வகையில் ஆய்வு செய்து பாருங்கள் என்கிறது. எதார்த்தத்தை எல்லோராலும் ஏற்றுக் கொள்ளப்பட வேண்டும் என்கிறது.புத்த மதம் பொருட்செல்வங்கள் மீது ஆசைப்படுவது கிடையாது. புத்தமதத்தில் தவறாக ஏதாவது கூறியிருந்தால், அறிவியல் கூற்றின்படி அதை மாற்றியமைத்து, ஏற்றுக் கொள்ள வேண்டும் என்று கூறுகிறது.

பாஹாய் மதம் :

பாஹாய் மதத்தின் அடிப்படைக் கோட்பாடு மதம் மற்றும் அறிவியல் நல்லிணக்கத்தைச் சார்ந்தது. அறிவியலும், மதமும் எப்பொழுதும் முரண்பாடுகளுடன் இருக்காது. மாறாக ஒற்றுமையுடன் சமூகத்தை முன்னடத்தி செல்வதற்குப் பெரும் உதவியாக இருக்கும் என்று கூறுகின்றன.

இந்த மதத்தைத் தோற்றுவித்த ‘அப்துல் பாஹா’ அறிவியலைப் பற்றி கூறும்பொழுது “மதம் இல்லாத அறிவியல் ஒரு மூடநம்பிக்கை என்றும் அறிவியல் இல்லாத மதம் ஒரு பொருளியம்” என்கிறார். மேலும் ஒரு உண்மையான மதமானது அறிவியல் கோட்பாடுகளின் முடிவுகளை ஏற்றுக் கொள்ளும் நிலைப்பாடு உடையதாக அமைந்திட வேண்டும் என்று கூறுகிறார்.

கிறிஸ்தவ மதம் :

கிறிஸ்தவ மதத்தைப் பொறுத்தவரை அறிவியல் வேறு, மதம் என்பது வேறு என்று கூறி வருகிறது. கடவுள்தான் உலகத்தைப் படைத்தார். உலகில் உள்ள ஜீவராசிகள் அனைத்தும் கடவுளால் படைக்கப்பட்டது என்று கூறுகிறது. அறிவியல் ஆய்வுகளில் ஈடுபடும் விஞ்ஞானிகள் மீது கொடூர தாக்குதல், கொலை செய்தல் போன்ற செயல்களில் ஈடுபட்டு வந்தன. 15ஆம் நூற்றாண்டில் பல்வேறு புரட்சிகரமான விஞ்ஞானிகளுக்குப் பெரும் சிக்கலைத் தேடித் தந்தது. கோபர்னிக்கஸ், உலகம் உருண்டை, பூமி சூரியனைச் சுற்றிவரும் ஒரு கோள் என்று கூறியபொழுது கடும் எதிர்ப்பினை மதம் வெளிப்படுத்தியது.அதேபோல் கலிலியோவும், அறிவியல் கோட்பாடுகளில் தீவிரமான ஆய்வுகளில் ஈடுபட்டு, கோபர்னிக்கஸின் அறிவியல் கோட்பாடு சரி எனக் கூறியதற்காக வீட்டுச் சிறையில் பல ஆண்டுகள் அடைக்கப்பட்டார். அக்காலத்தில் அறிவியல் ஆய்வுகள் மேற்கொள்வது, மனிதனை ஆய்வு செய்வதற்கும் கிறிஸ்தவ மதம் தடையாக இருந்து வந்துள்ளது என்று கூறலாம். இன்றைய கால கட்டங்களில் அறிவியல் வளர்ச்சி பெரிதும் ஏற்பட்டுள்ளதால் அறிவியலும், மதமும் ஒன்று என்று கூறுகிறது.

இந்து மதம் :

இந்து மதத்தைப் பொருத்தளவில் அறிவியல் மற்றும் மதத்திற்கு இடையே வேறுபாடுகள் உள்ளன. சில காரணிகள் அடிப்படையில் வேறுபட்டாலும், அறிவியல் வளர்ச்சியின்றி தன்னுடைய கலை மற்றும் கருத்தோவியங்களை அக்காலத்தில் செய்து இருக்க முடியாது என்கின்றனர்.

இந்து துறவிகள் அறிவியல் பற்றி கூறும்பொழுது இது எதார்த்தமான ஒன்று மற்றும் அனைத்து செயல்களையும் நியாயப்படுத்தும் அறிவை சார்ந்த செயல் என்று கூறுகின்றனர். இந்து மதக் கோட்பாட்டின்படி,நவீன அறிவியலானது சட்டபூர்வமானது. ஆனால் இதன் மூலம் எதார்த்தத்தை அறிய முடியாது என்று கூறினாலும் அறிவியல் கூறும் செய்திகள் உண்மையாகவும், சரியானதாகவும் இருக்கும் என்று கூறுகின்றனர். அதேபோல் இந்து மதமும் காலத்திற்குத் தகுந்ததுபோல் மாறிக்கொண்டு இருக்கும். தவறுகளை திருத்திக்கொண்டே வளர்ச்சி பெறும் என்கிறது. ஆனால் பரிணாமக் கொள்கையை ஏற்றுக் கொள்வதில்லை.

மனிதன் தோன்றியதிற்கு அடிப்படைக் காரணமாக பிரம்மா, விஷ்ணு, சிவன் போன்றவர்கள் முக்கிய காரணங்களாக இருக்கின்றனர். பிரம்மா படைத்தலுக்கும், விஷ்ணு அழித்தலுக்கும், சிவன் காத்தலுக்கும் பயன்படுகிறார்கள் என்று கூறப்படுகிறது. இவை அனைத்தும் வேதங்களில் குறிப்பிடப்பட்டுள்ளது. டார்வினுடைய பரிணாம வளர்ச்சி கோட்பாட்டை இந்து மதம் எதிர்த்தாலும் இந்தியாவில் 15 சதவீதம் பேர் பரிணாம கோட்பாட்டை ஏற்றுக் கொள்கின்றனர்.

இஸ்லாம்:

இஸ்லாம் மதத்தைப் பொருத்தவரை அறிவியல் என்பது இயற்கையை உணர்வது மற்றும் புரிந்து கொள்வது. இந்த செயலை தாயஹீத் (Taushid) என்னும் கல்வெட்டுக் குறிப்பில் கூறியுள்ளது. அறிவியல் எல்லா துறையிலும் இருக்க வேண்டும் என்கிறது. இஸ்லாமிய மதத்தில் இயற்கை பிரிக்கப்பட்டு பார்க்கப்படுவதில்லை. மாறாக கடவுள், மனிதன் மற்றும் பூமி மூன்றையும் ஒன்றாகவே கருதுகிறது. பிற மதங்களைவிட இயற்கை மற்றும் அறிவியல்மீது அதிக நம்பிக்கையுடையது. இஸ்லாமியர்களுடைய புனித நூலான குரானில் அறிவியல் அறிவைப் பற்றி நன்கு குறிப்பிடப்படுகிறது. 8ஆம் நூற்றாண்டிலிருந்து 16ஆம் நூற்றாண்டுவரை இஸ்லாமிய நாகரீகங்கள் மூலம் அறிவியல் பற்றி நன்கு அறியலாம். நவீன அறிவியல் மருத்துவமுறை முதன் முதலில் ‘அல்ஹசின்’ என்னும் முஸ்லீம் விஞ்ஞானியால் உருவாக்கப்பட்டது. இவர் கூறுகையில் அறிவியல் என்பது அறிவியல் சிந்தனை மற்றும் ஞானத்தால் உருவாக்கப்பட்டவை என்று இஸ்லாமிய நாகரீகங்கள் மூலம் உணரலாம் என்கிறார்.

அல்ஹசின் தன்னுடைய புத்தகங்களில் பல்வேறு அறிவியல் முறைகளை கூறி இருந்தார். இதன் மூலம் பல்வேறு அறிவியல் ஆய்வுகளை மேற்கொள்ள முடிந்தது. கிரேக்கர்கள்போல் இவருடைய அறிவியல் கண்டுபிடிப்புகளையும் பராமரித்து வந்தனர். இஸ்லாமிய காலிப்புகள் மூலம் ‘பாக்தாத்’ பகுதியில் பல்வேறு நூலகங்கள் மற்றும் பல்கலைக்கழகங்களை தொடங்கினர். மருத்துவம், வானியல், விவசாயம் போன்றவற்றில் பெரும் முன்னேற்றம் அடைந்தனர்.

காலனி ஆதிக்கத்தால் இஸ்லாமிய அறிவியல் முறையானது இஸ்லாத்தையும், அறிவியலையும் வெவ்வேறு கோணத்திற்கு இட்டுச் சென்றது. எனினும் இஸ்லாமிய மதம் அறிவியலை ஆதரிக்கிறது. அதில் கூறப்படும் அறிவியல் செய்திகளை உண்மையாக ஏற்றுக்கொண்டு காலத்திற்கு தகுந்தவாறு மாற்றியமைத்து கொள்ள வேண்டும் எனக் கூறுகிறது.

ஜைனம் :

ஜைன மதத்தைப் பொறுத்தளவில் மதம் வேறு அறிவியல் வேறு என்கிறது. பூமியை உருவாக்கியது கடவுள் என்னும் கோட்பாட்டை முற்றிலும் மறுக்கிறது. மாறாக அண்டமானது, பல்வேறு கோட்பாடுகளால் உருவானவை. காலத்திற்கு ஏற்ப மாறிக்கொண்டே இருக்கும் என்கிறார்கள். அண்டம் என்பது இயற்கை விதிகளின் அடிப்படையில் உருவாக்கப்பட்டவை. இதை உருவாக்க எந்த கடவுளாலும் முடியாது. மதம் மனிதனுடைய ஆன்மாவைப் பொறுத்தது, அறிவியல் வளர்ச்சி அதில் ஏற்படும் மாற்றங்கள் அவ்வப்பொழுது மாற்றியமைத்திட வேண்டும் என்று கூறுகிறது.

மனிதன் தன்னுடைய பாவங்களை போக்கும்பொழுது முக்தியடைய முடியும். இதில் எந்த கடவுளும் இல்லை என்று கூறுகிறது. கர்மா, மோக்ஷா போன்ற அறநெறிகளை பின்பற்றும்பொழுது முக்தியடைய முடியும் என்கிறது.

License

Icon for the Creative Commons Attribution-NonCommercial-NoDerivatives 4.0 International License

மதங்களின் பார்வையில் பெண்கள் Copyright © 2014 by creative commons Attribution-NonCommercial-NoDerivatives 4.0 International. is licensed under a Creative Commons Attribution-NonCommercial-NoDerivatives 4.0 International License, except where otherwise noted.

Share This Book