1

மதம் பழங்காலம் முதல் இன்றுவரை உலக மக்களால் பின்பற்றப்படுகிறது. மதம் என்பது கலாச்சாரத்தின் வெளிப்பாடாகவும், அமைதியின் வெளிப்பாடாகவும், வாழ்க்கை முறை, அறநெறிகள்,சடங்குகள், சம்பிரதாயங்களை உள்ளடக்கியது. இவை அனைத்தும் ஒன்று சேர்ந்து ஆன்மீகத்தை உலகிற்கு உணர்த்தும் ஒரு சமூகக் கட்டமைப்பை உள்ளடக்கியது.

உலகளவில் இன்றைக்கு 4200 வகையான மதங்களை மக்கள் பின்பற்றி வருகின்றனர் என்று ஒரு ஆய்வு கூறுகின்றது. இது ஒருபுறம் இருந்தாலும் பொதுவாக உலகளவில் 15 மதங்களே பெரும்பான்மையான மக்களால் பின்பற்றப்படுகிறது. மதம் என்னும் சொல் லத்தின் மொழியிலிருந்து உருவானது. ரிலிஜியோ (Religio) என்பதிலிருந்து ரிலிஜியன் (Religion) என பிற்காலத்தில் மாறியது. இதன் அடிப்படையில் மதத்தை லத்தின் மொழியில் ரிலிஜியோ எனக் கூறியிருந்தாலும் பல்வேறு மொழிகளில் மதம் என்று பயன்படுத்தாமல் தர்மா என்று சமஸ்கிருதத்திலும், தெற்கு ஆசியாவில் “சட்டம்” (Law), மரபுகள், சக்தி என்று பயன்படுத்தப்பட்டு வந்தன.

மதத்தின் கோட்பாடு அன்பை அனைவரிடமும் போதிப்பதும், உலகளாவிய அமைதியை நிலைநாட்டுவதே யாகும். இவை ஒரு நம்பிக்கையை சார்ந்துள்ளதால் இதன் மூலம் இறைவனுக்கு சேவை செய்வதும்,இறைவனை ஆன்மீக வழிகளில் அடைவதற்கான ஒரு அமைதி தேடல் என்று பலரும் கூறுகின்றனர்.

உலகளவில் மக்களுடைய நம்பிக்கை என்னவென்றால் தங்களுடைய துயரத்தைப் போக்குவதாக மதங்கள் உள்ளன. இவை மனரீதியான பிரச்சினைகளை தீர்க்கிறது. வாழ்வில் ஏற்படும் இன்னல்களிருந்து விடுபடுவதற்கு மதங்கள் உதவுகின்றன. மதம் ஒரு ஆலோசகர்போல் பயன்பட்டு வருவதாக மக்கள் கூறுகின்றனர்.

இது ஒருபுறம் இருந்தாலும் மதத்தில் உள்ள முரண்பாடான கருத்துகள் மற்றும் கோட்பாடுகளில் இருந்து மாறுபடுபவர்கள் உலகளவில் உள்ளனர். பலர் நாத்திகவாதிகளாகவும், மதமறுப்புக் கொள்கையுடன் நன்றாக வாழ்ந்து கொண்டும் வருகிறார்கள். இவர்கள் அறிவியல் பூர்வமாக அனைத்து நிகழ்வுகளையும் ஆராய்ந்து பார்க்கின்றனர். மேலும் உளவியல், மனரீதியான செயல்களுடன் ஒப்பிட்டு பார்ப்பதால் மதத்தைப் பின்பற்றுபவர்களிடமிருந்து இவர்கள் மாறுபடுகிறார்கள்.

மதத்தின் தோற்றம் :

மதம் சுமார் 5400 ஆண்டுகளுக்கு முன்பு தெற்கு ஆசியாவில் தோன்றியதாக கணக்கிடப்படுகிறது. அன்றைய காலகட்டத்தில் மதம் என்று பயன்படுத்தாமல் மனிதன் சடங்குகளை செய்து வந்தான். பிற்காலத்தில் சடங்குகள் அனைத்தும் மதமாக மாறிவிட்டன. மதத்தின் வளர்ச்சி 16ஆம் நூற்றாண்டிலிருந்து 20ஆம் நூற்றாண்டில் பெரும் வளர்ச்சி அடைந்தது. இந்த இடைப்பட்ட காலமே மதத்தின் நவீன கால வளர்ச்சி என்று குறிப்பிடுகிறார்கள்.

மதங்களின் தோற்றத்தைப் பற்றி பல்வேறு விதமான கருத்துகள் உள்ளன. குறிப்பாக மதம் என்பது இயற்கையாகவே உருவானது; இயற்கையிடமிருந்து மனிதன் கற்றுக் கொண்டது. மற்றொரு கருத்து மனிதனுடைய வளர்ச்சி அவனுடைய சிந்தனையால் உதயமானது. அது தவிர பல்வேறு சூழ்நிலைகளில் மனிதனுடைய மனநிலை மாற்றங்களாலும், மனநிலையைக் கட்டுப்படுத்த முடியாத நிலையில் மதங்கள் தோன்றியது என்றும் கூறுகின்றனர்.

மனிதன் அன்றைய காலகட்டத்தில் இயற்கை மீதும் அதன் பேரழிவுகள் மீதும் மிகவும் அச்சத்துடனே வாழ்ந்து வந்தான். பொதுவாக மூன்று காரணங்களால் மனிதன் மதத்தை பின்பற்ற நேர்ந்தது.

1. இயற்கையின் மீதுள்ள அச்சமும், எந்த நேரத்திலும் தாக்கப்படலாம், அழிக்கப்படலாம் என்கிற பயமும், வனவிலங்குகளிடமிருந்து பாதுகாத்து கொள்ளவும், மதத்தை ஒரு பாதுகாவலாக ஏற்றுக் கொண்டான்.

2. இயற்கையில் நடக்கக்கூடிய மாற்றங்களை எதிர்கொண்டும், வலிமை பெறுவதற்காகவும் மதத்தை நாடிச் சென்றுள்ளான்.

3. மனிதர்கள் அனைவரும் மனரீதியாக வித்தியாசப்படுவார்கள். அவர்களுக்கு என்று தனி நம்பிக்கை, சடங்குகள், விருப்புவெறுப்புகள் உள்ளன. ஒவ்வொரு மதத்தினரும் இதில் மாறுபடுவார்கள். மனரீதியான பிரச்சினைகள், மன அமைதி பெறுவதற்காக மதத்தைப் பின்பற்றுகிறார்கள்.

இறந்தவர்களைப் புதைக்கும் சடங்கானது சுமார் 1,00,000 ஆண்டுகளுக்கு முன்பு ஆப்பிரிக்கா, தெற்கு ஆசியா நாடுகளில் நடந்துள்ளது. புதைக்கப்பட்ட இடத்தை வழிபட்டு வந்தனர். இதுவே காலபோக்கில் மதமாக மாறுவதற்கு அடிப்படைக் காரணமாக அமைந்தது. எகிப்து பிரமிடுகளில் உள்ள மம்மிகளை வணங்கியது இதற்கு ஆதாரமாகக் கூறப்படுகிறது.

பல்வேறு மதங்கள் சடங்குகள் அடிப்படையில்தான் உதயமானது என்றும் இதன் மூலம் மனிதன் மதத்தைப் பின்பற்ற காரணமாக இருந்து வந்துள்ளது. 3,000 – 5,000 ஆண்டுகளுக்கு முன்பு மனிதன் மதத்தை முதன் முதலில் பின்பற்ற தொடங்கியுள்ளான் என்று ஆய்வுகள் கூறுகின்றன. இவை பழங்கால குகைகள், ஓவியங்கள் மற்றும் கலையின் மூலம் தெரிகின்றன.

பிறப்பு, இறப்பு போன்ற இயற்கை நிகழ்வுகளை மதச் சடங்குகளாக செய்து வந்துள்ளான். இதன் மூலம் இறைவனை எளிதில் அடையலாம் என்று ஒரு நம்பிக்கை உருவாகியுள்ளது. அவன் பயன்படுத்திய கருவிகள் மற்றும் பயன்படுத்திய பொருட்களை அவனுடனே புதைப்பது, மனிதன் மத சடங்குகள் மீது வைத்துள்ள நம்பிக்கையை வெளிப்படுத்துகின்றது.

சிகப்பு நிறத்தை பெருமளவில் மதத்தின் அடையாளமாக அன்றைய மனிதன் பயன்படுத்தி வந்துள்ளான். சிகப்பு நிறமானது உலகில் உள்ள பல்வேறு மக்களால் அன்றைய காலகட்டத்தில் பயன்படுத்தப்பட்டது.மனிதனுடைய கலாச்சாரத்தின் வெளிப்பாடாக சிகப்பு நிறம் குறிப்பிடப்படுகிறது. இதில் குறிப்பிடப்படும் அடையாளங்கள், ஓவியங்கள், சின்னங்கள் பல தரப்பு மக்களுடைய மத வழிபாடுகளை வெளிப்படுத்துகிறது. சிகப்பு நிறத்தின் பொருளாக இரத்தம், பாலினம், வாழ்க்கை, பிறப்பு, இறப்பு, சடங்குகள், நம்பிக்கை போன்ற செயல்களை குறிக்கின்றது.

என்னதான் மதங்கள் சடங்குகளிருந்து தோன்றினாலும் இவை சிறு குழுக்களாகவேதான் இருந்தது. அதிலும் ஒன்றிலிருந்து மற்றொன்று மாறுபட்டு இருந்தது. 11000 ஆண்டுகளுக்கு முன்பு விவசாயக்குழு வாழ்க்கைமுறை தோன்றின. மனிதன் வேட்டையாடிய நிலை மாறி விவசாயத்தின்மீது அவனுடைய ஆர்வம் வளர்ச்சி பெற்றது. இதன் அடிப்படையில் மதங்களும் வளர்ச்சி கண்டன. அதேபோல் அதன் மீதான நம்பிக்கையும் அனாமிஷிய சக்தியாக மதத்தை வழிபடத் தொடங்கினர். பிற்காலத்தில் அரசர்கள் தோன்றிய போது புதிய அரசுகள் உதயமானது. பிறகு பல்வேறு மதங்களை மக்கள் பின்பற்ற ஆரம்பித்தனர்.இறைவனுடைய தூதுவராக அரசர்கள் உள்ளனர் என்று ஆட்சியாளர்களும் மக்களை நம்பச் செய்தனர்.

மதங்களின் வகைகள் :

பல்வேறு மதங்களை உலகமக்கள் பின்பற்றி வந்தாலும், மதங்கள் அடிப்படையில் நான்கு வகையான கோட்பாடுகளைக் கொண்டுள்ளது. இவை நாட்டுக்கு நாடு வேறுபடுகிறது. மதம் பலரால் பின்பற்றிய போதிலும், பலரிடம் எதிர்ப்பையும், மறுப்பையும் உண்டாக்கியுள்ளது.

1. உலக மதங்கள்

2. சிறுபான்மையான மதங்கள்

3. புதிய மத அமைப்புகள்

4. மதமறுப்பு மற்றும் நாத்திகவாதிகள்

1. உலக மதங்கள் :

அனைத்து மக்களால் பின்பற்றப்படும், ஒரு மாற்று கலாச்சார கோட்பாடுகளைக் கொண்டு இயங்கி வருகிறது. மதக் கோட்பாடுகளை உலகளவில் பரப்புவதும் அதன் மூலம் சர்வதேச அமைதி மற்றும் மத நல்லிணக்கத்தை உருவாக்கித் தருவதும் இதனுடைய நோக்கமாக அமைந்து வந்துள்ளது. இதில் பெருமளவு பங்கினை கிறிஸ்துவ மதம் சமுதாயத்திற்குச் செய்துள்ளது. தன்னுடைய அமைப்புகள் மூலமும்,தேவாலயங்கள் மூலமும் மக்களுக்கு சமுதாயப் பணி மற்றும் மருத்துவச் சேவையை செய்து வந்துள்ளது.

2. சிறுபான்மையான மதங்கள் :

சிறுபான்மையான மதங்கள் ஒரு தேசத்திற்குட்பட்டு அல்லது ஒரு பகுதியான மக்களால் மட்டும் பின்பற்றப்படுவதாகும். குறிப்பாக மலைவாழ் மக்கள், ஆதிவாசி மக்களால் பெருமளவில் பின்பற்றப்படுகிறது.இவர்களுடைய கலாச்சார அடிப்படையில் உருவாக்கப்பட்ட மதங்கள் பல இனக்குழுக்களால் தொன்றுதொட்டு, இயற்கையை வணங்கி, வழிபடுகிறார்கள். இவ்வகையான குழுக்கள் ஆசிய, இந்தியப் பழங்குடி மக்களால் அதிகளவில் பின்பற்றப்படுகிறது. இதுபோன்று சீனாவில் அதிகளவில் பின்பற்றப்படுகிறது என்று ஆய்வுகள் கூறுகின்றன.

3. புதிய மத அமைப்புகள் :

மதங்களில் ஏற்படும் முரண்பாடுகள் மற்றும் மாற்றுக் கொள்கையின் காரணமாக புதிய மத அமைப்புகள் உருவாகக் காரணமாகிறது. புதிய மத அமைப்புகள் பெருமளவில் சிறிய குழுக்களாகத்தான் செயல்படுகிறது. புதிய கொள்கைகளையும், கோட்பாடுகளையும் உருவாக்கி தங்களுடைய மத குழுக்களை பரப்பியும், விழிப்புணர்வு ஏற்படுத்தி பிற மதங்களிருந்து மாறுபடுகின்றன.

4. மதமறுப்பு மற்றும் நாத்திகவாதிகள் :

உலகளவில் 36% மதமறுப்பு மற்றும் நாத்திகவாதிகள் உள்ளனர். இவர்கள் மதங்களில் உள்ள மூடநம்பிக்கைகள் மற்றும் முரண்பாடுகளை எதிர்க்கின்றனர். கொள்கைரீதியாக அனைத்து நிகழ்வுகளையும் அறிவியல் ஆய்வுக்குட்படுத்த வேண்டும் என்கின்றனர். நாத்திகவாதிகள் வளர்ச்சியடைந்த நாடுகளில் அதிகளவில் உள்ளனர். வளர்ச்சி அடைந்த நாடுகளில் அறிவியல் வளர்ந்திருப்பதால், அனைத்தையும் அறிவியல் பார்வையுடன் பார்க்கப்படுகிறது. இதனால் அங்கு மூடநம்பிக்கை குறைந்துள்ளது. வளர்ச்சி அடையாத நாடுகளில் பிற்போக்குத்தனம், மூடநம்பிக்கை அதிகம் உள்ளன. மற்றும் அறிவியல் பார்வை மிகவும் குறைவாகவே உள்ளது. இதனால் மதமறுப்பு மற்றும் நாத்திகவாதிகள் குறைவாகவே உள்ளனர். மதமும், அறிவியலும் ஒன்று என்று வளர்ச்சியடையாத நாடுகளில் நினைப்பதால் இங்கு மதமறுப்பாளர்கள் குறைவாகவே உள்ளனர்.

மதங்களும் கோட்பாடுகளும்

மதங்கள் பற்றி கூறும்பொழுது இவைகளுக்கு என்று கோட்பாடுகள் உண்டு. அதிலும் பல்வேறு கோட்பாடுகள் மூலம் மானிட நிபுணர்கள் விளக்கம் அளித்துள்ளனர். அதன் அடிப்படையில் இரண்டு வகையான கோட்பாடுகளால் இவை மாறுபடுகிறது.

1. அடிப்படையான கோட்பாடு

2. தேவைகள் சார்ந்த கோட்பாடு

அடிப்படையான கோட்பாடுகள்

மதங்களின் கொள்கைகள் மக்களையே சார்ந்துள்ளது. மக்களுடைய நம்பிக்கை, அறநெறிகள் எல்லாம் மதத்தின் மீது தாக்கத்தை உருவாக்கி தந்துள்ளது என்று கூறுகிறது. மனிதன் செய்யும் அனைத்து செயல்களும் நிறைவேறும்பொழுது மதத்தின்மீது அதிக நம்பிக்கை வரக்காரணம் என்று இந்த கோட்பாடு கூறுகிறது.

எட்வர்ட் பர்னட் டைலர் (Edward Burnett Tylor 1832 – 1917) மானிடவியல் நிபுணரான இவர் மதங்களின் கோட்பாட்டை பற்றி கூறும்பொழுது, மதங்கள் மக்களால் அதிகளவு பின்பற்றப்பட முக்கிய காரணமாக அனாமிஷிய சக்திகள் பற்றிய நம்பிக்கை மக்களிடம் அதிகளவில் காணப்படுகிறது. கனவுகளில் நடக்கும் சம்பவங்கள் நிஜத்தில் நடக்கும்பொழுதும், மாயாஜாலம், கட்டுக்கதைகள், புதிர்களைக் காணும்பொழுதும் ஏதோ ஒரு சக்தியுள்ளதாக உணர்கிறார்கள். இதனால் மதத்தினை நாடிச் செல்கின்றனர் என்று கூறுகிறார்.

ஜேம்ஸ் ஜார்ஜ் ப்ரேசர் :

மானிடவியல் நிபுணரான ஜேம்ஸ் ஜார்ஜ் ப்ரேசர் (James George Frazer 1854 – 1941) மதக் கோட்பாடுகளை பற்றி கூறும்பொழுது மக்கள் மதங்களை நாடிச் செல்வதற்கு மாந்திரீகம், சடங்குகள், மாயஜாலம், அச்சம் ஆகியவை முக்கிய காரணம் என்கிறார். இதனால் பயத்தைப் போக்குவதற்கு மதத்தை நாடுகிறார்கள். மதம் அவனுடைய தவிர்க்க முடியாத நம்பிக்கையாக உள்ளது. இயற்கை உலகத்துடன் சேர்ந்து வாழ்வதற்கு மதமும் அதைச் சார்ந்த சடங்குகளைப் பின்பற்ற கற்றுக் கொண்டுள்ளான். மாயஜாலங்கள் அனைத்தும் கடவுளால் உருவாக்கப்பட்ட சட்டங்கள் என்றும் இவை சடங்குகள் என்னும் பெயரில் பின்பற்றப்படுகிறது.இந்த உலகம் ஒருவரால் ஆளப்படுகிறது என்று மக்கள் நம்புகின்றனர் எனக் கூறுகிறார்.

ரடல்ப் ஓட்டோ:

மத நிபுணர் ரடல்ப் ஓட்டோ (Rudolf Otto 1869 – 1937) மதத்தைப் பற்றி கூறும்பொழுது மதம் பல்வேறு பாதைகளைக் கடந்து வந்துள்ளது. இதற்கு என்று தனியான கோட்பாட்டினை கூற இயலாது. மாறாக எல்லா குணங்களை கொண்டு இயங்கி வரும் ஒரு புரியாத புதிராக உள்ளது. இதன் அடிப்படையில்தான் மதங்கள் உருவாக காரணமாக இருந்து இருக்கும் என்கிறார்.

மனிதன் மூடநம்பிக்கையின்மீது அதிக நம்பிக்கை கொண்டிருக்கிறான். எல்லாவற்றையும் பகுத்தறிந்து பார்க்காமல் போனதால் மனித மனதானது மதத்தை நாடியும், அறிவியலுக்கு முரண்பட்டும்,அனாமிஷியங்கள்மீது அதிக நாட்டம் உருவாகக் காரணமாகிவிட்டது என்று கூறுகிறார்.

தேவைகள் சார்ந்த கோட்பாடு :

தேவைகள் சார்ந்த கோட்பாடுகளின்படி மதமானது சமூகம் அல்லது மனரீதியான செயல்களை நிறைவேற்றும் வகையில் ஒரு கூட்டத்தையும், மக்களை வழிநடத்தும் பாலமாக உள்ளது. சமுதாயப் பணிகளை மேற்கொள்ளும் செயலாக வழிவகுக்கிறது என்றும் மதத்தை பார்க்கின்றனர். சமுதாயத்தில் மக்களுக்குத் தேவையான அடிப்படை வசதிகளை பூர்த்தி செய்ய முடியும் என்று மதக் கோட்பாடு கூறுகிறது. தேவைகள் மனிதனுக்கு அடிப்படையான ஒன்று என்பதால் இதனைப் பெறுவதற்கு மதமும் சமுதாயத்துடன் ஒன்று சேர்ந்து போராட வேண்டுமென்று கூறுகின்றன. பல்வேறு சமூகங்களை ஒன்றிணைக்கவும், தன் கொள்கைகளை மக்கள் தேவைக்கு ஏற்ப மாற்றும் வழியில் மதத்தை பயன்படுத்துகின்றனர்.

கார்ல் மார்க்ஸ் (1818 – 1883) மதமும் அதனுடைய கோட்பாட்டை பற்றிக் கூறும்பொழுது இவை அனைத்தும் வர்க்கப் போராட்டத்தை அடிப்படையாகக் கொண்டுள்ளது. மனிதனுயை மனதானது சமுதாயத்தைச் சார்ந்தே அமைந்துள்ளது. இதனால் மனிதன் எப்பொழுது தனிமையில் இருக்கிறானோ அப்பொழுது தனது தனிமையிலிருந்து விடுபடுவதற்கு ஒரு வழிகாட்டியாக மதத்தை பயன்படுத்திக் கொள்கிறான். மதம் இல்லாமல் மனிதன் வாழ முடியாத சூழ்நிலைக்கு தள்ளப்பட்டுள்ளான். எனவே மதம் ஒரு போதையூட்டும் பொருள். மனிதனுடைய கலாச்சாரத்திற்கு மதம் ஒருபொழுதும் உபயோகமாக இருக்காது. இது தேவையற்ற ஒன்றாகவே உள்ளது என கார்ல் மார்க்ஸ் கூறுகிறார்.

எமில் டர்கிம் (Emile Durkheium 1858 – 1917) மதத்தைப் பற்றிக் கூறும் பொழுது, மதம் ஒரு புனிதமான செயல், சமூகத்தின் வெளிப்பாடாகவும், கலாச்சாரத்தின் வெளிப்பாடாகவும் உள்ளது என்றார். மேலும் இவை அனாமிஷிய சக்திகளைக் கொண்டு செயல்படுவதில்லை. மாறாக ஒவ்வொரு குழுவுக்கும் தனித்தனியாக ஒருமித்தக் கருத்தினால் செயல்படும் ஒரு சமூக அமைப்பாக உள்ளது. இக்குழுக்கள் ஒன்று சேரும்பொழுது, ஒரு புதுவிதமான சக்தி பெற்று தங்களை மறந்து கடவுளுடைய அருளை பெறுகின்றனர். மதம் ஒரு தனிமனித இயந்திரம். இதன் மூலம் லட்சியத்தை அடையும் வழியை காட்டுகின்றது என்று கூறுகிறார். ஆனால் எந்தவிதமான மாயஜாலங்களும் கிடையாது. மாறாக மக்களுடைய நம்பிக்கைகளையும், சடங்குகளையும் சார்ந்துள்ளது.

மாக்ஸ் வீபர் (Max Weber 1864 – 1920) மதம் என்பது அறிவியலுக்கு முரண்பாடான செயல் என்றார். ஒவ்வொரு மதமும் தன்னுடைய சமூகத்தில் ஒருவகையான சுரண்டல் முறையைக் கையாளுகிறது. வர்க்கப் போராட்டத்தின் தாக்கமாக மதம் சமூகத்தை மாற்றியமைத்துள்ளது என்ற மார்க்ஸின் கொள்கையுடன் ஒத்துப் போகிறார். மதம் ஒருவருக்கு சுரண்டலை உண்டாக்கித் தருகிறது என்றும் கூறுகிறார்.

சிக்மன்ட் ப்ராய்டு (Sigmund Freud 1856 – 1939) மதம் என்பது மனரீதியான வெளிப்பாடு என்றார். மக்கள் பெருமளவில் எந்த செயல்மீது நம்பிக்கை வைக்கிறார்களோ அது உண்மையாக வேண்டுமென்று நம்புகிறார்கள். மனிதனுடைய மனரீதியான தேவைகளுக்காக மதத்தைப் பயன்படுத்துகிறார்கள். ஆனால் அத்தேவைகள் என்றும் பூர்த்திசெய்யப்படாது மனரீதியான தேவைகள் மூலமாக மதம் என்னும் செயல் உதயமாகிறது என்கிறார். மதம் ஒரு வழிகாட்டி என்பதால் இதன்மூலம் மனஅழுத்தம் போன்ற இன்னல்களிருந்து, தனிமையை போக்குகிறது என்றும் கூறுகிறார்.

உலகளவில் பின்பற்றும் மதங்கள் :

உலகளவில் அதிகமாகப் பின்பற்றப்படும் மதங்கள் 10 என்றாலும் இதைத் தவிர பல்வேறு சிறுபான்மையான மதங்களும் பின்பற்றப்படுகிறது. உலகளவில் கிறிஸ்தவ மதம் முதன்மையாக பின்பற்றப்படுகிறது.இஸ்லாமிய மதம், இந்து, சீக்கிய மதம், ஜைனமதம், புத்த மதம், யூத மதம், சீனப் பழங்குடி மதம், புதிய மதங்கள், சின்டோஸ்ட்ஸ், பிற மதங்கள் என பல உள்ளன. இது தவிர மத மறுப்பு, நாத்திகவாதிகள் என மதம் சாராதவர்களும் இருக்கின்றனர்.

1. கிறிஸ்தவம்33.1 %

2. இஸ்லாம்20.3 %

3. இந்து13.3 %

4. சீக்கியம்0.4 %

5. ஜைனம்0.1 %

6. புத்தம்5.9 %

7. யூதம்0.2 %

8. சீன பழங்குடி மதங்கள்6.3 %

9. புதிய மதங்கள்1.7 %

10. சின்டோஸ்ட்ஸ்0.1 %

11. யஹாஸ்0.1 %

12. கன்பக்சனிஸ்ட் 0.1 %

13. பிற மதங்கள்14.1 %

மதம் சாராதவர்கள் :

உலகளவில் மத நம்பிக்கையுடையவர்கள் அதிகமாக இருந்தாலும் மறுபுறம் மதம் சாராதவர்களுடைய எண்ணிக்கையும் அதிகமாக உள்ளது. மதங்களில் உள்ள மூடநம்பிக்கை, சடங்குகள், அனாமிஷியங்கள் போன்ற செயல்களாலும், கட்டுக்கதைகள், மாயாஜலங்கள் போன்ற அவநம்பிக்கையான செயல்களால் இவர்கள் மதங்களை பின்பற்றாமலும், இதிலிருந்து விலகியே இருக்க வேண்டுமென்று எண்ணுகிறார்கள்.ஒருபுறம் இவ்வாறு இருந்தாலும் மதங்கள் பல்வேறு பிரச்சினைகளையும் சமூக ரீதியான பிரச்சினைகளுக்கு காரணமாக உள்ளது. இதனால் மதம் மனிதனுடைய வளர்ச்சிக்கு ஒருபோதும் உதவியாக இருப்பதில்லை என்று எண்ணுகிறார்கள்.

மதமறுப்பவர்கள் வைக்கும் விவாதமானது மனிதனுக்கு பிரச்சினைகள் ஏற்படுவது இயல்பான ஒன்று. தனிமை என்பது மனரீதியாகவும், உளவியல் ரீதியான பிரச்சினையாகவும் பார்த்து சரிசெய்திட வேண்டும் என்கின்றனர். இவர்கள் மதத்திற்கு எதிரானவர்கள் கிடையாது. மாறாக மதத்தில் உள்ள மூட நம்பிக்கைகள், தவறான வழிகாட்டுதல் போன்ற செயல்களை முற்றிலும் எதிர்க்கிறார்கள்.

எல்லாவற்றையும் ஒரு அறிவியல் பார்வையுடன் கையாள வேண்டும். அறிவியலால்தான் மனித வாழ்வின் அடிப்படையான செயல்களையும் செய்து முடித்திட முடியும். மேலும் உலகளவில் பல்வேறு இன மற்றும் பாகுபாடுகளால் நடக்கும் வன்முறைக்கு மதமும் ஒரு காரணமாக அமைந்துள்ளது என்பதை யாரும் மறுத்திட முடியாது. மதங்கள் அன்பை போதிக்கின்றன என்பதிலிருந்து மாறுபட்டு இருப்பதால் மதம் சாராதவர்களாகவும், முற்போக்குவாதிகளாகவும், நாத்திகவாதிகளாவும் மாறியுள்ளனர்.

மதம் என்பது அவர்களுடைய வாழ்வில் தேவையற்ற ஒன்றாக கருதுகின்றனர் என்று கூறியாக வேண்டும். மதம் சாராதவர்களாக இவர்கள் தனிமைப்படுத்தப்படுவதில்லை. உலகளவில் 36% பேர் இவ்வாறு இருக்கிறார்கள் என்பது வியப்பாக உள்ளது. மதக் கோட்பாடுகளில் ஏற்படும் முரண்பாட்டால், மதம் சாராதவர்களாக மாறும் நிலைக்கு வருகிறார்கள். இன்றைய காலகட்டங்களில் மதம் சாராதவர்களின் எண்ணிக்கை வளர்ந்த நாடுகளில் அதிகளவில் உள்ளது.

உலகளவில்

மத நம்பிக்கை உடையவர்கள் 59%

மத நம்பிக்கை இல்லாதவர்கள் 23%

நாத்திகவாதி 13%

எந்த நம்பிக்கையும் இல்லாதவர்கள் 5%

மதம் நம்பிக்கை நம்பிக்கையற்றவர்

கிறிஸ்து 81% 16%

இஸ்லாம் 74% 20%

யூதம் 38% 54%

இந்து 82% 12%

மத நம்பிக்கையற்றவர்களின் பட்டியல்

நாடுகள் மத நம்பிக்கை மத நம்பிக்கை நாத்திகவாதிகள் எந்த நம்பிக்கையும்

இல்லாதவர்கள் இல்லாதவர்கள்

1. சீனா 14 30 47 9

2. ஜப்பான் 16 31 31 22

3. கிரீஸ் குடியரசு 20 48 30 2

4. பிரான்ஸ் 37 34 29 0

5. தென் கொரியா 52 31 15 2

6. ஜெர்மனி 51 33 15 1

7. நெதர்லாந்து 43 42 14 1

8. ஆஸ்ட்ரியா 42 43 10 5

9. ஐஸ்லாண்டு 57 31 10 2

10. ஆஸ்திரேலியா 37 48 10 5

11. அயர்லாந்து 30 44 10 16

வளரும் நாடுகளில் மதத்தின் தாக்கம் அதிகமாகவும், மதம் சாராதவர்களுடைய எண்ணிக்கை குறைவாகவும் உள்ளது என்று கூறலாம். இதற்குக் காரணம் மூடநம்பிக்கைகள், அறிவியல் வளர்ச்சி இல்லாதது,பகுத்தறியும் செயல்கள் குறைவாக உள்ளதுமே ஆகும்.

மதம் சாராதவர்கள் பற்றிய ஆய்வு 57 நாடுகளில், ஆண், பெண் என 50,000 பேர்களிடம் மேற்கொள்ளப்பட்டது. கானா, நைஜீரியா, ஆர்மீனியா, மாசிடோனியா, ருமேனியா, ஈராக், கென்யா, பெரு, பிரேசில் போன்ற நாடுகளில் 85-96 சதவீதம் பேர் மத நம்பிக்கை உடையவர்களாக உள்ளனர். குறிப்பாக அறிவியல் வளர்ச்சி, கல்வி வளர்ச்சி, பொருளாதார வளர்ச்சி அடையாத நாடுகளிலேயே மத நம்பிக்கை உடையவர்கள் அதிகம் உள்ளனர்.

உலகளவில் கல்லூரி அளவில் படித்தவர்களிடம் மத நம்பிக்கைக் குறைவாக உள்ளது. கல்வியறிவு இல்லாதவரிடம் மத நம்பிக்கை அதிகம் உள்ளது. வறுமையில் வாடுபவர்களே மதத்தின்மீது அதிக நம்பிக்கை கொண்டிருக்கின்றனர்.

வேறுபாடுகள் :

மதம் ஒரு நம்பிக்கையை சார்ந்த செயல் என்று கூறினாலும் எல்லா நம்பிக்கை முறையும் மதத்தை சார்ந்தது கிடையாது. மதத்தைப் பின்பற்றுவர்களுக்கும், மத நம்பிக்கையற்றவர்களுக்கும் உள்ள வேறுபாட்டைக் கூறுவது எளிது.

பல நேரங்களில் மக்கள் மத நம்பிக்கை முறையை மிகவும் கடினமான செயலாக கருதுகின்றனர். அதேபோல் அறிவியல் ஆய்வுகளை, மதத்துடன் ஒப்பிட்டு தங்களை குழப்பிக்கொள்கிறார்கள், ஆன்மீகத்தையும் அது ஒரு மதம் சாராத செயலாகவே கருதுகிறார்கள். ஏன் என்றால் மதம் பல்வேறு நேரங்களில் அவ்வப்பெயர்களை கொண்டு இயங்குகிறது என்று நினைக்கிறார்கள்.

மத நம்பிக்கையைக் கொண்டவர்கள் மதத்தில் கூறப்படும் விசயங்களை அப்படியே நம்புவதும், அதில் உள்ள சடங்குகளை பின்பற்றவதும் பெருமளவு காணப்படுகிறது. இதுவே மத மறுப்புடையவர்கள் மூட நம்பிக்கைகளுக்கு இடமளிக்காமல் அனைத்தையும் அறிவியல் பார்வையுடன் ஆய்வு செய்து பார்க்க வேண்டுமென்று கூறுகிறார்கள்.

மதத்தைப் பின்பற்றுபவர்களுக்கு இடையே வெவ்வேறு வகையான நம்பிக்கை முறைகள் உள்ளன. அதில் இரண்டு வகையான நம்பிக்கைகள் பின்பற்றப்படுகின்றன. ஒன்று தன்னுடைய மதத்தைப் பற்றிய நம்பிக்கை. மற்றொன்று பிற மத நம்பிக்கையை அன்னிய சக்திகளாகக் கருதுகிறார்கள். ஆனால் மத நம்பிக்கையற்றவர்கள் தங்களுக்கு மதத்தின்மீது நாட்டமில்லை என்றாலும் அனைத்து மதத்தையும் மாண்போடு நடத்துகிறார்கள்.

மதமும், அறிவியலும் ஒன்றொடு ஒன்று தொடர்புடையது என்று மதத்தைப் பின்பற்றுபவர்கள் கூறுகிறார்கள். ஆனால் மதமறுப்பு கொள்கையுடையவர்கள் மதம் என்பது வேறு, அறிவியல் என்பது வேறு.அவ்வாறு ஒன்று என்று கூறினால் இவை ஆய்வுக்குட்படுத்தப்பட வேண்டும் என்று கூறுகிறார்கள்.

மதத்தைப் பின்பற்றுபவர்கள் கடவுள் இருக்கிறார், அவர் எங்கும் நிறைந்தவர் என்று கூறுகின்றனர். ஆனால் மதமறுப்பாளர் கடவுள் என்பது உண்மையானது கிடையாது. இவை அனைத்தும் மனிதனுடைய கற்பனையே என்று கூறுகின்றனர்.

மதமானது அபூர்வ சக்திகளைக் கொண்டது. இதன் மூலம் பல்வேறு நற்செயல்களை கொடுக்க வல்லது. மதமறுப்பாளர்கள் மதத்திற்கு அபூர்வ சக்திகள் என்று ஒன்றும் இல்லை. இவை அனைத்தும் ஒரு மூட நம்பிக்கையான செயலாகவே உள்ளது. மனிதன் மனரீதியான பிரச்சினைகளை சந்திக்கும் பொழுது அபூர்வ சக்தியுள்ளது என்று நம்புகிறான் என இவர்கள் கூறுகின்றனர்.

மதத்தைப் பின்பற்றுபவர்களிடம் பிற மதத்தை ஏற்றுக்கொள்ளும் பக்குவம் அல்லது புரிதல் கிடையாது. மேலும் பிறமதத்தினரை இழிவாக நினைப்பதும், வன்முறை வெறியாட்டத்தில் ஈடுபடுவதும் வாடிக்கையாகி வருகிறது. ஆனால் மதமறுப்பு கொள்கையுடையவர்கள் மத மோதல்கள் கூடாது என்கின்றனர். மதம் இல்லை என்றால் எந்தவிதமான பிரச்சினைகளும் வராது, மத மோதல்கள் ஏற்படாது என்கின்றனர்.

உலகில் உள்ள அனைத்து ஜீவராசிகளும் கடவுளால் உருவாக்கப்பட்டவை. இதற்கு என்று தனி ஆன்மா உள்ளது என மத நம்பிக்கையாளர்கள் கூறுகின்றனர். உலகில் உள்ள அனைத்து ஜீவராசிகளும்,பரிணாம வளர்ச்சியின் காரணமாக உருவானது. இதற்கு என்று ஆன்மா கிடையாது. பிறப்பு என்று இருக்கும்பொழுது இறப்பும் இருக்கும். இதில் எங்கு ஆன்மா உள்ளது என்று மதமறுப்பாளர்கள் கேட்கிறார்கள்.

மதங்கள் உலகளவில் பின்பற்றப்பட்டாலும் அது ஒரு தேவை சார்ந்த செயலாக உள்ளது. இதன் மூலம் முக்தியடைய முடியும் என்கின்றனர். நேரடியாக இறைவனை அடைய சிறந்த வழியாக மதம் உள்ளது என மதவாதிகள் கூறுகின்றனர். ஆனால் முக்தி என்பதே ஒரு மூடநம்பிக்கை. கடவுளை அடையமுடியும் என்பது ஒரு பொய்யான செயல். இதன் மூலம் சுரண்டலுக்கு மதம் இட்டுச் செல்கிறது என மதமறுப்பாளர்கள் கூறுகின்றனர்.

மதமும், மூடநம்பிக்கையும் :

மதமும், மூடநம்பிக்கையும் ஒன்றை ஒன்று சார்ந்துள்ளது. அவை சில மதங்களில் அதிகளவில் காணப்படுகிறது. சில மதங்கள் சற்று மாறுபட்டு முற்போக்குடன் உள்ளது என்றும் கூறலாம்.

கிறிஸ்தவ மதத்தில் கருப்புப் பூனையையும், பாம்பையும் சாத்தானுடைய அவதாரமாக சித்தரிக்கப்படுகிறது. அதேபோல் எண் 13, 666 மதத்திற்கு எதிரானது என்று கூறுகிறது. கிறிஸ்தவ புனித நூலான பைபிளில் கூறப்படும் செய்திகளை மறுப்பவர்கள் பாவம் செய்தவர் என்றும், நரகத்திற்குச் செல்வான் என்றும் கூறுகிறது. இதுபோன்ற பல நம்பிக்கை கிறிஸ்தவத்தில் பின்பற்றப்படுகிறது. பிற மதத்தை வணங்குவது தவறு அவ்வாறு செய்தால் பல எதிர்மறையான விளைவுகளை சந்திப்பீர்கள் என்றும் கூறுகிறது.

கிறிஸ்தவ மதத்தில் மட்டும்தான் இதுபோன்ற நம்பிக்கை இருக்கிறது என்பது கிடையாது. பிற மதங்களிலும் இதுபோன்ற மூட நம்பிக்கையை மக்கள் பின்பற்றுகின்றனர். உலகளவில் பல்வேறு மதங்கள் இருந்தாலும் மூடநம்பிக்கை என்பது அனைவராலும் ஏற்றுக்கொள்ளப்பட்டு வருகிறது. மூடநம்பிக்கையை ஏற்றுக்கொள்வதற்கு ஏற்ப கதைகளையும் கூறுகின்றனர். இதுதான் மதத்திற்கு பாதகமாகவும், சில நேரங்களில் எதிராகவும் உள்ளது.

உலகளவில் மிகவும் பிரபலமாகவுள்ள மூடநம்பிக்கைகளைப் பார்க்கும் பொழுது, 13ஆம் தேதி வெள்ளிக்கிழமையன்று வந்தால் அந்நாள் கெட்ட நாளாகவும், அன்றைய தினம் கடவுளுக்கு ஏற்ற தினமாக இருக்காது கெட்ட அதிர்ஷ்டத்தை தேடித் தரும் என்று நம்புகின்றனர். உள்ளங்கை அரித்தால் பணம் பறி போகும். அதேபோல் பேராசை பிடித்தவர்களாக இருப்பார்கள் என்று கூறுகின்றனர்.

முகம் பார்க்கும் கண்ணாடி உடைந்தால் அதில் முகம் பார்க்கக்கூடாது. கண்ணாடி என்பது நம் வாழ்க்கை போன்றது. அது உடையும்பொழுது அதிர்ஷ்டமில்லாமல் போய்விடும். கெட்ட அனாமிஷியங்களை தூண்டிவிடும் என்று நம்புகின்றனர்.

குதிரை லாடம் ரோட்டில் அல்லது எங்காவது கண்டு எடுத்தால் அதை வீட்டு முச்சந்தியில் கட்டிவைப்பதன் மூலம் நம்மிடம் அதிர்ஷ்டம் வந்து சேரும் என்று நம்பப்படுகிறது. கெட்ட ஆவிகள் நம்மை விட்டு விலகிச் செல்லும் என்கிறார்கள். வீட்டின் உள்ளே குடையைத் திறப்பதும், கருப்புக் குடையை வெய்யில் நேரங்களில் திறப்பதும் சூரிய பகவானை அவமானப்படுத்தும் செயலாகும். அவ்வாறு செய்யும்போது கெட்ட செய்திகள் வீடு தேடிவரும் என்று நம்புகின்றனர்.

மரக்கட்டையில் அல்லது மரத்தினை இரண்டுமுறை தட்டிப் பார்க்கும் பொழுது அதன் மூலம் இயற்கை வடிவில் உள்ள இறைவன் தீய சக்திகளை அழித்து அருள்புரிவார் என்று நம்பப்படுகிறது. சிதறிய உப்பினை எடுத்து பிறர் மீது தெளிப்பது நற்செயல்கள் வந்து சேரும். அதேபோல் தீய சக்திகள் போன்றவை விலகி, அமைதி திரும்பும் என்று நம்புகின்றனர்.

கருப்புப் பூனையை பார்க்கும்பொழுது கெட்ட செய்தி வந்து சேரும், கருப்புப்பூனை என்பது சாத்தானுடைய உருவமாக கருதப்படுகிறது. கெட்ட செயல்கள் நடக்க வழிவகுக்கும். தீய சக்திகளைத் தூண்டிவிடுவதாக கருப்புப்பூனை கருதப்படுகிறது என்று உலகளவில் நம்பப்படுகிறது.


இவ்வாறு உலகம் முழுவதும் பின்பற்றப்பட்டாலும் மூடநம்பிக்கை சார்ந்த செயல்களுக்கு மக்கள் மத்தியில் ஒரு வகையான பயமும்
, பீதியும் நிலவுகிறது என்று கூறித்தான் ஆக வேண்டும். இவை சில சமயங்களில் மதம் சார்ந்து இருந்தாலும் பல்வேறு நேரங்களில் மதத்தை மிஞ்சும் அளவிற்கு மிகவும் பிரபலமாக எல்லா நாடுகளிலும் காணப்படுகிறது.

நம் நாட்டைப் பொருத்தவரை பல்வேறு மூடநம்பிக்கைகளை தினமும் நாம் பார்க்க நேரிடுகிறது. இந்தியாவைப் பொறுத்தவரை மதங்களுக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கப்படுகிறது. அதேபோல் மதம் சார்ந்த மூடநம்பிக்கையும் அதிகளவு பின்பற்றப்படுகிறது என்று கூறியாக வேண்டும். இந்தியாவில் வாழும் மக்கள் அன்றாடம் மூடநம்பிக்கையின்றி வாழ்க்கையை நடத்த இயலாது என்கிற சூழ்நிலைக்கு தள்ளப்படுகிறார்கள். பொதுவாக அனைத்து மூடநம்பிக்கையும் மனிதனைக் காக்கும் எண்ணத்துடன் உருவாக்கப்பட்டவை என்றும், எதிர்காலத்தை தீர்மானிக்கும் செயலாக உள்ளது என்றும் கூறுகின்றனர்.

இந்தியாவில் மூடநம்பிக்கை என்பது விலங்குகள், பறவைகள் போன்றவற்றில் ஆரம்பித்து திருமணம், உற்றார், உறவினர்வரை தொன்றுதொட்டு பின்பற்றப்படுகின்றது. சில விலங்குகள், பறவைகள் நற்செய்திக்கும், சில விலங்குகள், பறவைகள் கெட்ட செய்திக்கும் அதிகளவு பின்பற்றப்படுகிறது. ஒரு யானையை எங்காவது பார்த்தால் நற்செய்தி மற்றும் அதிர்ஷ்டத்தை தேடித் தரும். இது கடவுள் கணேசனைக் குறிக்கிறது என நம்புகின்றனர். காகம் வீட்டின் அருகில் கத்தும்பொழுது விருந்தினர்கள் வருவார்கள் என்றும், மயிலை பயணத்தின்பொழுது பார்க்க நேர்ந்தால் அதிர்ஷ்டம் என்றும், நோயுற்றவர் அருகில் நாய் ஊளையிட்டால் அவர் இறந்துவிடுவார் என்றும், காலையில் பூனை அல்லது பசுவின் முகத்தில் விழித்தால் கெட்ட செய்தி தேடி வரும் என்றும் நம்பப்படுகிறது.

இவை ஒருபுறம் இருந்தால் மனிதனைச் சார்ந்த மூடநம்பிக்கைகளும் இருக்கத்தான் செய்கிறது. ஒரு பயணத்தை தொடர்வதற்கு முன்பு ஜோதிடரை பார்ப்பது, விவசாயம் செய்வதற்கு ஏற்ற நாள் எது என்று ஜோதிடம் பார்க்கப்படுகிறது. ஒருவர் பயணம் செய்யும்போது யாராவது தும்பினால் “நீ இங்கே இரு எங்கும் போகாதே” என்று கூறுகின்றது. அதை மீறி பயணம் செய்ய நேர்ந்தால் அந்த பயணத்தில் பல தடங்கல்கள் ஏற்பட நேரிடும் என்கின்றனர்.

அதேபோல் ஒருவர் கனவு காணும்பொழுது கடவுள், பேய்கள், விலங்குகள் போன்றவற்றை கண்டால் அது நற்செய்திகள் கொண்டு வந்து சேர்க்கும். இரும்பு, தங்கம், எரிகற்கள், நிலநடுக்கம், இயற்கைப் பேரிடர்கள் காண நேர்ந்தால் இவை கெட்ட செய்திகளைக் கொண்டுவந்து சேர்க்கும். கனவுகளுக்கு ஒரு தனித்துவம் வாய்ந்த சக்தியும், எந்த நேரத்தில் எந்த கனவு வருகிறது, அதற்கு ஏற்ப நற்செயல்கள் மற்றும் தீய செயல்கள் நேர்ந்திடும் எனப் பெரும்பாலும் நம்பப்படுகிறது. வாரத்தின் நாட்கள் அடிப்படையில் திங்கட்கிழமை அல்லது செவ்வாய்க்கிழமை சவரம் செய்வது ஏற்ற தினமாக இருக்காது. உறவினர் அல்லது வீட்டில் உள்ள நபர்கள் வெளியூர் செல்லும்பொழுது யாரும் தலைக்குளியல் செய்திடக் கூடாது என்கின்றனர்.

இதைத் தவிர சில பொதுவான மூடநம்பிக்கையும் மக்கள் மத்தியில் நிலவுகிறது. ஒருவர் இரவு நேரங்களில் நகங்களை வெட்டுவது கூடாது. இவை கெட்ட ஆவிகளை துண்டிவிடும் என்கின்றனர். சூரிய அஸ்தமனத்திற்குப் பிறகு வீடுகளை கூட்டக் கூடாது, அவ்வாறு செய்தால் லட்சுமி வந்து சேராது. அதே போல் ஒருவருக்கு விக்கல் எடுக்கும்பொழுது அவரை யாரோ ஒருவர் நினைக்கிறார் என்று கூறுகின்றனர்.இரவு நேரங்களில் புளிய மரங்களின் அருகில் செல்லக் கூடாது. பழைய பூட்டிய வீடுகளுக்கும், சுடுகாடுகளுக்கும் செல்வது பேய்களை ஈர்க்கும், இதுபோல் பெண்கள் கர்ப்பமாக இருக்கும்பொழுது இரவு நேரங்களில் வெளியில் செல்லக்கூடாது. காலியாக உள்ள வீட்டுக்குள் செல்லக் கூடாது. அப்படிச் செய்தால் கெட்ட ஆவிகள் பிடிக்க வாய்ப்புள்ளது. கர்ப்பமாக உள்ள பெண்ணின் கணவர் சொந்தமாக வீடு கட்டக் கூடாது. அப்படி செய்தால் பூமி நற்பண்புகள் அனைத்தையும் இழந்துவிடும் என்கின்றனர். குழந்தை பிறந்தவுடன் தந்தை குழந்தையை ஆறு மாதங்களுக்கு பார்க்கக் கூடாது. அவ்வாறு பார்த்தால் குழந்தைக்கு கெட்ட செய்தியை தேடித் தரும் என்கின்றனர். அதனால்தான் பெண்களை பிரசவத்திற்கு தாய் வீட்டிற்கு அனுப்பி விடுகிறார்கள் என்றும் கூறப்படுகிறது.

ஒரு பெண் மாதவிடாய் நேரங்களில் நற்காரியங்களில் கலந்து கொள்வது தவறு. சமையலறை அல்லது பிறருடன் கலந்து கொள்வது கூடாது. ஏன் என்றால் அவள் தூய்மையாக இருக்கமாட்டாள். அதற்குப் பதிலாக நன்கு ஓய்வு எடுக்க வேண்டும். கோயில்களுக்கு செல்லக்கூடாது. வீட்டில் யாரேனும் கோயிலுக்குச் செல்ல இருந்தால் அவர்களுக்கு உணவு மற்றும் பிற காரியங்களை செய்திடக்கூடாது என்கின்றனர்.

வலது உள்ளங்கை அரிக்கும் பொழுது நற்செய்தி, இடது உள்ளங்கை அரிக்கும்பொழுது கெட்டது என்றும், வலது கண் துடிப்பது கெட்டது என்றும், இடது கண் துடிப்பது நற்செய்தியை தேடித் தருமென்றும் கூறுகின்றனர். திருமணங்களில்கூட அதிகளவில் மூடநம்பிக்கைகள் பின்பற்றப்படுகிறது. புதிதாக பெண் திருமணமாகி புகுந்த வீட்டிற்கு வரும்பொழுது அதிர்ஷ்டத்தைக் கொண்டு வருகிறாள் என்றும்,ஓராண்டிற்கு நடக்கும் அனைத்து நிகழ்ச்சிகளும் பெண்ணுடைய அதிர்ஷ்டமாக கருதுகின்றனர். எதாவது தீய செயல்கள் ஏற்பட்டாலும் பெண்ணைத்தான் சாரும் என்கின்றனர்.

விதவைப் பெண்களை பொறுத்தவரை அவர்கள் அதிர்ஷ்டமற்றவர்கள். பல்வேறு சுப நிகழ்ச்சிகளுக்கு அவர்களை அனுமதிப்பது கிடையாது. இவர்களுடைய வரவு கெட்ட செயல்களை தேடித் தரும் என்கின்றனர். புது மணப்பெண் ஒரு விதவையை பார்க்கக்கூடாது என்கிற மூடநம்பிக்கையும் பின்பற்றப்படுகிறது.

குழந்தையற்ற பெண்ணுக்கு சில வரைமுறைகளும், கட்டுபாடுகளும் உண்டு என்கின்றனர். பல்வேறு சுபநிகழ்ச்சிகளில் இவர்களை சேர்த்துக் கொள்வதில்லை. வளைகாப்பு, திருமணங்களில் பெரும்பாலும் கலந்து கொண்டாலும் இவர்கள் எந்த சடங்குகளையும் முன்நின்று செய்வதில்லை. இவர்கள் அருகில் சென்றால் எல்லா பாவங்களும் புதுப்பெண் அல்லது குழந்தைகளை பாதிக்கும் என்று கூறுகின்றனர்.அதிகாலை உதயமாகும் பொழுதுகூட சில மூடநம்பிக்கையுள்ளது. ஒரு மணப்பெண்ணை பார்ப்பது, கடவுள் சிலை பார்ப்பது அதிர்ஷ்டம் என்றும், விதவைகள், அதிர்ஷ்டமற்ற நபர்களை பார்ப்பது கெட்ட செயல் என்று கூறுகின்றனர்.

License

Icon for the Creative Commons Attribution-NonCommercial-NoDerivatives 4.0 International License

மதங்களின் பார்வையில் பெண்கள் Copyright © 2014 by creative commons Attribution-NonCommercial-NoDerivatives 4.0 International. is licensed under a Creative Commons Attribution-NonCommercial-NoDerivatives 4.0 International License, except where otherwise noted.

Share This Book